

அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளேன் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஸ்மிருதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டு உள்ளார்.
அவர் அமைச்சராக நியமிக் கப்பட்டபோது பள்ளிப் படிப்பைகூட நிறைவு செய்யாத அவருக்கு மனிதவள அமைச் சகம் அளிக்கப்பட்டது ஏன் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. வேட்புமனு தாக்கலின் போது இரானி தனது கல்வித் தகுதி குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: நான் கல்வியறிவு இல்லாதவள் என்று சிலர் என்னை விமர்சனம் செய்கிறார்கள். நான் யேல் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்றுள்ளேன். எனது தலைமைப் பண்பை யேல் பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது.
எனது வேட்பு மனுக்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் கவலைப்பட மாட்டேன். நீதிமன்றத்தில் உரிய பதிலை அளிப்பேன். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நான் எவ்வாறு செயல்படுகிறேன் என்பதை முதலில் கணியுங்கள். அதன்பிறகு என்னை மதிப்பிட்டு விமர்சனம் செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.
யேல் பல்கலைக்கழகத்தில் அவர் எந்தத் துறையில் பட்டப் படிப்பு முடித்தார் என்பது குறித்து இரானி எதுவும் குறிப்பிடவில்லை.
கடந்த ஆண்டு 11 இந்திய எம்.பி.க்கள் யேல் பல்கலைக் கழகத்தில் தலைமைப் பண்பு குறித்த படிப்பை மேற்கொண் டனர். அதில் ஸ்மிருதி இரானியும் ஒருவர். அதைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.