நிலம் வழங்கிய 18 மாதங்களில் வெடிபொருள் உற்பத்தியை தொடங்கியது அதானி நிறுவனம்: யோகி ஆதித்யநாத் பாராட்டு

நிலம் வழங்கிய 18 மாதங்களில் வெடிபொருள் உற்பத்தியை தொடங்கியது அதானி நிறுவனம்: யோகி ஆதித்யநாத் பாராட்டு
Updated on
1 min read

கான்பூர்: உத்தர பிரதேசத்தின் கான்பூரில் தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய வெடிபொருள் ஆலையை ரூ.3 ஆயிரம் கோடி முதலீட்டில் அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த திங்கள் கிழமைதொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கான்பூரில் 500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த ஆலையில். பாதுகாப்பு படைகள், துணை ராணுவ படைகள் மற்றும் காவல்துறையினர் பயன்படுத்தும் பல வித துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு ஒரு ஆண்டில் தேவைப்படும் துப்பாக்கி குண்டுகளில் 25 சதவீதம், அதாவது சுமார் 15 கோடி துப்பாக்கி குண்டுகள் இங்கு தயார் செய்யப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: இது பெருமையான தருணம். உ.பி. தொழில் மையமாக மாறிவருவதற்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா என்ற உறுதிக்கும் இந்த வெடிபொருள் ஆலை சான்றாக உள்ளது. அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மிகப் பெரிய முதலீட்டை உத்தர பிரதேசத்தில் செய்துள்ளது. நிலம் ஒதுக்கப்பட்ட 18 மாதங்களில், தனது செயல்பாட்டை அதானி நிறுவனம் தொடங்கியுள்ளது. நாட்டின் வலுவான பாதுகாப்பு சூழலை உருவாக்குவதில் இந்த ஆலை முக்கிய பங்காற்றும். இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் நாட்டின் பாதுகாப்புக்கு உதவுவது பெருமையாக உள்ளது. இவ்வாறு முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in