Published : 29 Feb 2024 07:43 AM
Last Updated : 29 Feb 2024 07:43 AM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவர் சந்தேஷ்காலி கிராமத்தில் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நிலம் அபகரிக்கப்பட்டிருந்தால் திருப்பிஅளிக்கப்படும் என்று முதல்வர் மம்தா உறுதி அளித்திருந்தார். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஷாஜகான் ஷேக்கை கைது செய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு நேற்று வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
சந்தேஷ்காலி விவகாரம் குறித்தும், இன்று வரை குற்றவாளியைக் கைது செய்யாத மாநில அரசின் அடாவடித்தனத்தைப் பற்றி பேசும்போது, என் உடல் நடுங்குகிறது. ஆணோ, பெண்ணோ... இதைத் தாங்கக்கூடிய தலைவர் இருக்க முடியுமா?
மேற்கு வங்க அரசு இன்னும் அந்த நபரைக் கைது செய்யவில்லை. ஆனால், மணிப்பூர் பிரச்சினையை அவர்கள் (திரிணமூல் காங்கிரஸார்) எத்தனை முறை எழுப்பினார்கள் என்று எனக்கு நினைவிருக்கிறது.
ஷாஜகான் ஷேக் எங்கிருக்கிறார் என்பது அவர்களுக்கு (திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்) தெரியும். இல்லையென்றால், ஒரு வாரத்தில் கைது செய்வோம் என்று எப்படிச் சொல்ல முடியும்?
மேற்கு வங்க அமைச்சர்கள் மட்டும் சந்தேஷ்காலி நகருக்குள் செல்கிறார்கள். மற்றவர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இது என்ன மாதிரியான சட்டம் ஒழுங்கு என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT