

குவாஹாட்டி: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணையும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான், முன்னாள் எம்.பி. மிலிந்த் தியோரா போன்ற தலைவர்கள் காங்கிரஸை விட்டு வெளியேறியது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அசாம் காங்கிரஸ் செயல் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ.வுமான ராணா கோஸ்வாமி, காங்கிரஸ் பொதுச் செயலர் (அமைப்பு) கே.சி.வேணுகோபாலுக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “அசாம் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
டெல்லியில் முகாமிட்டுள்ள ராணா கோஸ்வாமி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரை சந்தித்த பின் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தல் நேரத்தில் கோஸ்வாமி வெளியேறியது காங்கிரஸுக்கு சிக்கலை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.
செவ்வாயன்று நடந்த மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இப்போது வட இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான இமாச்சல பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழ்நிலையை தடுக்க அக்கட்சி போராடி வருகிறது.