“பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் உண்மையெனில் கடும் நடவடிக்கை” - கர்நாடக முதல்வர் உறுதி

கர்நாடக முதல்வர் சித்தராமையா | கோப்புப்படம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா | கோப்புப்படம்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்டது என்ற பாஜகவின் குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்தச் சம்பவம் கர்நாடகாவில் செவ்வாய்க்கிழமை நடந்த மாநிலங்களவைத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நடந்ததாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் 4 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கி நடந்தது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களிலும், பாஜக ஓர் இடத்திலும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் வேட்பாளர் நாசர் ஹுஸைனின் வெற்றியைக் கொண்டாடும்போது ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ள ஆளும் காங்கிரஸ் கட்சி, ‘காங்கிரஸ் அலுவலகம் முன்பு பாஜகவினர் சலசலப்பை உருவாக்கினர்’ என்று பதில் குற்றம்சாட்டியது.

பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "நாங்கள் குரல் அறிக்கையை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் கிடைத்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த முடிவு எடுக்கப்படும். யாராவது குற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

கர்நாட்க துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில், "அந்தக் குற்றச்சாட்டு பாஜகவின் சதி, அவ்வாறு எந்த விதமான முழக்கங்களும் எழுப்பப்படவில்லை. பொய்யைப் பரப்பியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை சலசலப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in