Last Updated : 27 Feb, 2018 09:13 AM

 

Published : 27 Feb 2018 09:13 AM
Last Updated : 27 Feb 2018 09:13 AM

சண்டிகர் மருத்துவ கல்லூரி விடுதியில் தமிழக மாணவர் தற்கொலை

டெல்லியை அடுத்த சண்டிகர் மருத்துவக் கல்லூரி விடுதியில் தமிழக மாணவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். எனினும் இதில் மர்மம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லிக்கு அருகிலுள்ள யூனியன் பிரதேசமான சண்டிகரில் பட்ட மேற்படிப்பிற்கான மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (பிஜிஐஎம்இஆர்) அமைந்துள்ளது. இதன் ஊடுகதிர் துறையில், தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர்.கிருஷ்ண பிரசாத் (24) முதலாம் ஆண்டு பட்ட மேற்படிப்பு பயின்று வந்தார்.

ராமேஸ்வரத்தின் குருக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவரது தந்தை ராமு. கிருஷ்ண பிரசாத்துக்கு பிஜிஐஎம்இஆர் வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியிலேயே தங்குவதற்கு இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கிருஷ்ண பிரசாத் நேற்று காலையில் விடுதியிலிருந்து குறித்த நேரத்துக்கு பணிக்கு வரவில்லை. இதனால், சக மாணவர் ஒருவர் செல்பேசியில் கிருஷ்ண பிரசாத்தை அழைத்துள்ளார். ஆனால் அவர் செல்பேசியை எடுக்காததால், விடுதி அறைக்கே நேரில் சென்று பார்த்துள்ளார். கதவை தட்டியும் திறக்காததால் அலுவலர்கள் வந்து கதவை உடைத்துள்ளனர். அப்போது கிருஷ்ண பிரசாத் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ந்தவர்கள் அவரை கீழே இறக்கி பரிசோதித்தபோது, அவர் உயிர் பிரிந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சண்டிகரின் செக்டர் 11 காவல் நிலைய ஆய்வாளர் லக்பீர் சிங், ‘தி இந்து’விடம் கூறும்போது, “டாக்டர் கிருஷ்ண பிரசாத் தனது அறையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையை சோதனையிட்டதில் அவர் எழுதிய கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. அவரது உடலில் வேறு எந்த இடத்திலும் காயமில்லை என்பதால் முதல்கட்டமாக அது தற்கொலை என வழக்கு பதிவு செய்துள்ளோம். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு கூடுதல் விவரம் தெரியவரும்” என்றார்.

இதுகுறித்து சண்டிகரில் பயிலும் தமிழக மாணவர்கள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கிருஷ்ண பிரசாத் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலேயே, தனக்கு இந்தி மொழி தெரியாதது ஒரு பெரிய பிரச்சினை என்பதை உணர்ந்துள்ளார்.

எங்களுக்கும் இந்த அனுபவம் இருந்தது என அவரிடம் எடுத்துக்கூறினோம். ஆனால், சில தினங்களில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தமிழகம் செல்வதாக செல்போனில் கூறிவிட்டு கிளம்பிவிட்டார். விமான நிலையம் வரை சென்று அவரை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வந்தோம். எனினும் அவர் தொடர்ந்து சக மாணவர்களிடமும் இந்தி தெரியாதது குறித்து புலம்பி வந்துள்ளார்”என்றனர்.

கிருஷ்ண பிரசாத்தின் மரணம் குறித்த தகவல் அவரது தந்தை ராமுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தனது மனைவியுடன் விமானம் மூலம் டெல்லி வந்தார். இங்கிருந்து சாலை வழியாக சண்டிகருக்கு சென்றனர்.

இவர்களுக்கு உதவ தமிழக சுகாதார துறை அதிகாரிகளும் உடன் வந்துள்ளனர். இதையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் கிருஷ்ண பிரசாத்துக்கு இன்று உடற்கூறு ஆய்வு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு அவரது உடல் இன்று இரவுக்குள் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கிடையே, கல்லூரி நிர்வாக தரப்பிலும் இது தற்கொலை என கூறப்பட்டாலும், மர்ம மரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கிருஷ்ண பிரசாத்தின் மரணம், இந்தக் கல்லூரியில் பயிலும் பல தமிழக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் டெல்லியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த, தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த 2 மாணவர்கள் இறந்துள்ளனர். இதுவும் தொடக்கத்தில் தற்கொலை என வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணனின் வழக்கு மர்ம மரணம் என பிறகு மாற்றப்பட்டது.

ரூ.3 லட்சம் இழப்பீடு

இந்நிலையில், மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் கே.பழனிசாமி, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, அவரது குடும்பத்துக்கு ரூ.3லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x