Published : 28 Feb 2024 07:59 AM
Last Updated : 28 Feb 2024 07:59 AM
புதுடெல்லி: சிக்கிம் மாநிலத்தில் ரயில்வே நெட்வொர்க் என்பது இல்லாமல் இருந்தது. சிக்கிம் மக்கள் போக்குவரத்துக்கு சாலை, வான் மார்க்கத்தையே நம்பியிருந்தனர். ரயில்வே வசதி மட்டும் இல்லாமல் இருந்தது. அந்த குறையைப் போக்கும் வகையில் சிக்கிமில் முதல் ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடக்கி வைத்தார். மூன்று கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதலில் செவோக் முதல் ரங்போ வரையிலும், இரண்டாவது கட்டத்தில் ரங்போவில் இருந்து கேங்டாங் வரையிலும், இறுதியாக கேங்டாங்கில் இருந்து நாதுலா வரையும் இந்த ரயில்வே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து திட்ட இயக்குநர் மொகிந்தர் சிங் கூறியதாவது:
சிக்கிமின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலையை போற்றும் வகையில் முதல் ரயில் நிலையம் அமைக்கப்படும். மேற்கு வங்கத்தில் சிலிகுரிக்கு அருகிலுள்ள செவோக் முதல்சிக்கிமின் ரங்போ வரை 45 கி.மீ.ரயில் பாதை ஒருங்கிணைக்கப்படும். இந்தப் பாதையில், 3.5 கி.மீ. மட்டுமே சிக்கிம் எல்லைக்குள் இருக்கும். எஞ்சிய 41.5 கி.மீ. மேற்கு வங்க எல்லைக்கு உட்பட்டது.
14 சுரங்க பாதைகள்: இந்த ரயில் பாதை திட்டம், 14 சுரங்க பாதைகள், 13 பெரிய பாலங்கள், 9 சிறிய பாலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. 86 சதவீத பணிகள் சுரங்கம் வழியாக செல்வதால் இந்த திட்டம் சவாலானதாக உள்ளது. பாறைகள் உடையக்கூடிய தன்மையுடன் காணப்படுவதால் மாதத்துக்கு 15 மீட்டர் அளவில் மட்டுமே சுரங்கம் தோண்டப்படுகிறது.
மழைக்காலங்களில் என்எச்-10 சாலையில் அடிக்கடி இடையூறு ஏற்படுவதால் செவோக்-ரங்போரயில் பாதை திட்டம் சிக்கிம்மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 25 டன் சுமைகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் இந்தப் பாதையில் ரயில்களை அதிகபட்சமாக மணிக்கு110 கி.மீ வேகத்தில் இயக்க முடியும். மேற்கு வங்கத்தின் ரியாங்,டீஸ்டா, மெல்லி ஆகிய மூன்று இடங்களில் ரயில் நிலையம் அமைய உள்ளது. சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பாதுகாப்புக்கு ரங்போ ரயில் நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறு மொகிந்தர் சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT