Published : 17 Feb 2018 01:16 PM
Last Updated : 17 Feb 2018 01:16 PM

விவேகானந்தரை அவமானப்படுத்துவதா?- பாஜக, இந்துத்துவா அமைப்புகளுக்கு சசி தரூர் கண்டனம்

விவேகானந்தரின் கருத்துக்களை இந்து அமைப்புகளும், பாஜகவும் திரித்து கூறி அவரை அவமானப்படுத்துவாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருகாட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’’ என்ற காங்கிரஸ் சசி தரூரின் புத்தக வெளியீடு மற்றும் விவாத நிகழ்ச்சி நடந்தது.

அதில் கலந்து கொண்டு சசி தரூர் பேசியதாவது:

‘‘இந்து மதத்தின் தத்துவங்களையும், கொள்கைகளையும் சிலர் அரசியலாக்குகின்றனர். பிரதமர் மோடி உட்பட பலரும், விவேகானந்தரின் கருத்துக்களை முழுமையாக படிக்காமல் நுனிப்புல் மேய்ந்தவாறு தகவல்களை கூறுகின்றனர். ஆனால் நான் விவேகானந்தரை முழுமையாக படித்து விட்டு கூறுகிறேன். விவேகானந்தர் கூறியவற்றை முழுமையாக படிக்காமல் சில அடிப்படைவாதிகள் இந்து மதத்திற்கு இழுக்கு தேடி தருகின்றனர். விவேகானந்தர் பேச்சுகள், கருத்துகள் ஆங்கிலத்தில் உள்ளன. அதனை சிலர் தவறாக திரித்து வேறு மொழிகளில் சொல்லி விடுகின்றனர்.

‘‘எழுமின் விழுமின் குறிசாரும் வரை நில்லாது செல்மின். இந்துவாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்’’ என விவேகானந்தர் கூறியதாக சில இந்துத்துவ அமைப்பினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் விவேகானந்தர் உண்மையை உணர்ந்து கொள்வதில் பெருமை கொள்ளுமாறு தான் கூறியுள்ளார். இதன் மூலம் அவர்கள் விவேகானந்தரை அவமானப்படுத்துகின்றனர். தன்னைப் போலவே மற்ற மதங்களையும் இந்து மதம் போற்றுகிறது. சகிப்புத் தன்மையையே இந்து மதம் போதிக்கிறது. 21-ம் நூற்றாண்டிற்கு ஏற்ற சமய நல்லிணக்க கருத்துக்களையே இந்து மதம் போதிக்கிறது’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x