“வதந்திகளுக்கு நீங்கள்தான் காரணம்...” - ஊடகங்களிடம் கமல்நாத் ஆவேசம்

கமல்நாத் | கோப்புப்படம்
கமல்நாத் | கோப்புப்படம்
Updated on
1 min read

சிந்த்வாரா: "நான் அப்படிச் சொல்லி நீங்கள் யாராவது கேட்டீர்களா?" எனக் கூறி பாஜகவுக்கு மாறுவது குறித்த பேச்சுக்கு மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மத்தியப் பிரதேச காங்கிரஸின் முன்னாள் தலைவர் கமல்நாத் ஐந்து நாள் பயணமாக மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டத்துக்குச் சென்றுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கட்சித் தொண்டர்களைச் சந்தித்து கூட்டம் நடத்த இருக்கிறார். அங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாஜகவில் இணைவதாக பரவிய தகவல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கமல்நாத், "நீங்கள் (ஊடகங்கள்) தான் அப்படிச் சொல்கிறீர்கள். வேறு யாரும் அப்படிச் சொல்லவில்லை. நான் அப்படிச் சொல்லி நீங்கள் ஏதாவது கேட்டீர்களா? அதற்கான அறிகுறி ஏதாவது இருக்கிறதா? ஒன்றுமே இல்லை. நீங்கள் (ஊடகங்கள்) தான் அந்தச் செய்தியை உருவாக்கி உலவ விட்டீர்கள். பின்னர் என்னிடம் அதுபற்றிக் கேட்கிறீர்கள். முதலில் நீங்கள் அதை மறுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

வரும் மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், “தற்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழை மற்றும் ஆலங்கட்டி மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பாதிப்பு குறித்து பேசியவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அதிகரித்து வரும் மாநிலத்தின் கடன் குறித்து பாஜக தலைமையிலான ஆட்சியை சாடியவர், "இந்த ஆட்சி கடனில் மட்டுமே நடக்கிறது. அது மக்களின் பணம்" என்று குற்றம்சாட்டினார்.

முன்னதாக, மத்தியப் பிரதேச காங்கிஸின் மூத்த தலைவர் கமல்நாத் பாஜகவுக்கு மாறப்போவதாக ஊகம் வெளியாகி சமீபத்தில் தலைப்புச் செய்தியானது. ஆனால், அதனை காங்கிரஸும், கமல்நாத்துக்கு நெருக்கமானவர்களும் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in