Published : 27 Feb 2024 07:11 AM
Last Updated : 27 Feb 2024 07:11 AM
மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனோஜ் ஜராங்கே பாட்டீல் என்பவர் போராடி வருகிறார். இவர் ஜால்னா மாவட்டம் அந்தர்வலி சாரதி கிராமத்தில் கடந்த 10-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இந்நிலையில், மராத்தா சமூகத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் கடந்த வாரம் நிறைவேறியது. எனினும், ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தனது போராட்டத்தை தொடர்ந்தார் மனோஜ். இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தின் 17-வது நாளான நேற்று தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது உடல்நிலை குறித்து நிலவும் குழப்பம் மற்றும் இந்த கிராமத்துக்கு எனது ஆதரவாளர்கள் வருவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக எனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன். எனினும், 3 முதல் 4 இளைஞர்கள் இங்கு போராட்டத்தை தொடர்வார்கள். நான் சில நாட்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வேன். அதன் பிறகு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT