Published : 26 Feb 2024 03:02 PM
Last Updated : 26 Feb 2024 03:02 PM

‘அக்னி பாதை’யால் இளைஞர்களுக்கு அநீதி: பட்டியலிட்டு குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கடிதம்

புதுடெல்லி: அக்னி பாதை திட்டம் என்பது நாட்டின் ராணுவத்தில் நிரந்தர வேலைத் தேடும் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் முடிவால் சுமார் 2 லட்சம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என்றும், அவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அதில் காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “வீரமும், போராட்ட குணமும் உள்ள ஆயுதப் படையில் ஆர்வமுள்ள இளைஞர்களின் நீதிக்கான போராட்டத்தில் காங்கிரஸ், அவர்களுக்குத் துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அதன் விவரம்:

“இந்திய அரசு தனது வாக்குறுதியை மீறியதால், தங்களின் கனவுகள் கலைந்துபோன லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உங்களுக்குச் சுட்டிக்காட்டுவதே எனது இந்தக் கடிதத்தின் முக்கிய நோக்கம். சமீபத்தில் அவர்களை நான் சந்திதேன். கடந்த 2019 - 2022 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் இளைஞர்கள், இளம் பெண்களிடம் இந்தியாவின் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை என்ற 3 ஆயுதப் படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது எனத் தெரிவித்தனர்.

இந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கடுமையான மனம், உடல் மற்றும் எழுத்துத் தேர்வில் போராடி வெற்றி பெற்றவர்கள். கடந்த 2022 மே 31-ம் தேதி வரையில் அவர்களின் கனவுகள் நிறைவேறி விட்டதாகவே நம்பிக்கொண்டிருந்தனர். தங்களின் வேலைக்கான உத்தரவுக்காக காத்திருந்தனர். இந்த ஆட்சேர்ப்பு முறையை நிறுத்துவதாகவும், அதற்கு மாற்றாக அக்னி பாதை திட்டத்தை கொண்டு வரப்பட்டதாகவும் மத்திய அரசு அறிவித்த நாளில் அவர்களின் கனவுகள் சிதைந்து போயின.

அக்னி பாதை திட்டத்தில் பல சிக்கல்கள் இருப்பது வெளிப்படையானது. முன்னாள் ராணுவ ஜெனரல் எம்.எம். நரவனே தனது நினைவுக் குறிப்பில், ‘அக்னி பாதை திட்டத்தால் ராணுவம் ஆச்சரியமடைந்தது. கப்பல் மற்றும் விமானப் படைக்கு இது எதிர்பாராத ஆச்சரியத்தை கொடுத்தது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் திட்டம் நமது வீரர்களுக்கு இடையே பாரபட்சத்தை உருவாக்குகிறது. ஒரே வேலையைச் செய்ய எதிர்பார்க்கப்படும் வீரர்களுக்கு இடையே இரு வேறு ஊதியங்கள், சலுகைகள், வாய்ப்புகளை உருவாக்குகிறது. நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் பெரும்பாலான அக்னி பாதை வீரர்கள் நிச்சயமற்ற வேலைவாய்ப்பு சந்தைக்குள் தள்ளப்படுவார்கள். இது சமூகத்தில் நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கிவிடும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

இந்த இளைஞர்கள் தங்களின் கனவுகளைத் துரத்துவதற்கு பல ஆண்டுகள் செலவழித்ததைத் தாண்டி, 50 லட்சம் விண்ணப்பதாரர்களில் தலா 250 பேர் பணம் செலுத்த வேண்டியிருந்தது. விண்ணப்பப் படிவங்களும் திருப்பித் தரப்படவில்லை. இவ்வாறு அந்த இளைஞர்களிடம் சுமார் ரூ.125 கோடி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விரக்தியும் ஏமாற்றமும் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

நமது இளைஞர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு நியாயமும், நீதியும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு வேண்டுகிறேன்" என்று கார்கே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூன் 2022-ல் ஆயுதப்படையில் சேர்வதற்கான வயதைக் குறைக்க, ஆயுதப் படைகளில் குறுகிய கால சேவையை அறிமுகப்படுத்தும் வகையில், ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.

அக்னி பாதை திட்டத்தில் 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் முப்படைகளில் சேரலாம். தற்போதைய கல்வித் தகுதி, உடற்தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். புதிய திட்டத்தில் பணியில் சேருவோர், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x