குஜராத் | துவாரகாதீஷர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு 

குஜராத் | துவாரகாதீஷர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு 
Updated on
1 min read

துவாரகா: குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகாதீஷர் கோயிலில் பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழிபாடு நடத்தினார். குஜராத்தில் கோமதி நதி மற்றும் அரபிக்கடலின் முனையில் அமைந்துள்ளது துவாரகாதீஷர் கோயில். துவாரகாதீஷ் அல்லது துவாரகையின் அரசர் என்று அழைக்கப்படும் கடவுள் கிருஷ்ணர் கோயிலின் பிரதான தெய்வம்.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக இன்று காலையில் பிரதமர் மோடி சென்றார். அவரை வரவேற்ற கோயில் பூசாரிகள் பிரதமருக்கு கிருஷ்ணர் சிலை பரிசாக அளித்தனர். பின்னர் துவாரகாதீஷர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

முன்னதாக, குஜராத்தின் ஓகா மற்றும் பெய்ட் துவாரகா தீவை இணைக்கும் ‘சுதர்ஷன் சேது’ பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். ரூ.979 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலமானது துவாரகாதீஷர் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2.32 கி.மீ நீளமுள்ள இப்பாலம் நாட்டின் மிக நீளமான கேபிள்-தாங்கு பாலமாக அமைந்துள்ளது. ‘சிக்னேச்சர் பாலம்’ என்றும் இது அழைக்கப்படுகிறது.

இந்த நான்கு வழிச்சாலை பாலம் 27.20 மீட்டர் அகலமும், பாலத்தின் இரண்டு பக்கமும் 2.50 மீட்டர் அகல நடைப்பாதையும் கொண்டுள்ளது. இந்த நடைபாதையில் பகவத் கீதையின் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலத்தை திறந்தது வைத்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், “நிலங்களையும் மக்களையும் இணைக்கும் பாலமான சுதர்சன் சேதுவை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பாலம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நமது அர்ப்பணிப்பின் சான்றாகத் துடிப்புடன் நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in