Published : 25 Feb 2024 05:44 AM
Last Updated : 25 Feb 2024 05:44 AM
புதுடெல்லி: ஏடன் வளைகுடா பகுதியில் ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பலாவ் நாட்டின் சரக்கு கப்பலுக்கு, இந்திய போர்க்கப்பல் உதவி அளித்தது.
செங்கடல், ஏடன் வளைகுடா போன்ற பகுதிகளுக்கு வரும் சரக்குகப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஹவுதி தீவிரவாதிகள் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் வணிக கப்பல்களின் பாதுகாப்புக்காக அரபிக் கடல் பகுதியில் இந்திய போர்க்கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பலாவ் குடியரசு நாட்டின் வணிக கப்பல் எம்.வி. ஐலேண்டர் கடந்த வியாழக்கிழமை ஏடன் வளைகுடா அருகே சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கப்பலின் மேல்தளம் சேதம் அடைந்து தீப் பற்றியது. இதில் அந்த கப்பலில் இருந்த ஊழியர் ஒருவரும் காயம் அடைந்தார்.
இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக ஏடன் வளைகுடா பகுதிக்கு இந்திய போர்க்கப்பல் விரைந்தது. அந்த கப்பலில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர், எம்.வி. ஐலேண்டர் கப்பலில் இறங்கினர்.
வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் குழுவினர் வணிக கப்பல் முழுவதும் சோதனை செய்து, மேலும் அபாயம் இல்லை என்பதை உறுதி செய்தனர். காயம் அடைந்த ஊழியருக்கு இந்திய கடற்படையின் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இந்திய போர்க்கப்பல் சரியானநேரத்தில் அளித்த உதவியையடுத்து, எம்.வி. ஐலேண்டர் கப்பல் தனது பயணத்தை தொடர்ந்தது.
கடந்த சில மாதங்களில், ஹவுதி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பல வணிக கப்பல்களுக்கு இந்திய போர்க்கப்பல்கள் உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT