

புதுடெல்லி: உத்தர பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த சூழலில் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, 58 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிடும் 58 வேட்பாளர்களில் 21 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 10 பேர் மீது அதிதீவிர குற்ற வழக்குகள் உள்ளன. மிக அதிகபட்சமாக பாஜக வேட்பாளர்களில் 8 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் 6, திரிணமூல் காங்கிரஸ் 4, சமாஜ்வாதியின் 2 வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
58 வேட்பாளர்களில் 12 பேரிடம்ரூ.100 கோடிக்கும் அதிகமாகசொத்துகள் உள்ளன. இந்த பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. அந்த கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்களிடம் ரூ.100 கோடிக்கும்அதிகமாக சொத்துகள் உள்ளன.காங்கிரஸின் 2 வேட்பாளர்களிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருக்கின்றன.
மிக அதிகபட்சமாக காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வியிடம் ரூ.1,872 கோடி, சமாஜ்வாதிவேட்பாளர் ஜெயா அமிதாப் பச்சனிடம் ரூ.1,578 கோடி, கர்நாடகாவை சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் குபேந்திர ரெட்டியிடம் ரூ.871 கோடி சொத்துகள் உள்ளன.மிக குறைந்தபட்சமாக பாஜக வேட்பாளர் பாலயோகி உமேஷ் நாத்திடம் ரூ.47 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே உள்ளன.