Published : 25 Feb 2024 05:37 AM
Last Updated : 25 Feb 2024 05:37 AM

டெல்லி, குஜராத் உட்பட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் தொகுதி உடன்பாடு

புதுடெல்லி: டெல்லி, குஜராத் உட்பட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‘இண்டியா' என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி இண்டியா கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆம் ஆத்மி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் ஆதிஷி மர்லேனா மற்றும் சவுரப் பரத்வாஜ், காங்கிரஸ்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் செய்தியாளர்களுக்கு நேற்று கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது முகுல் வாஸ்னிக் கூறியதாவது:

டெல்லியில், புதுடெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும். சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி மற்றும் வடமேற்கு டெல்லி ஆகிய 3-ல் காங்கிரஸ் போட்டியிடும்.

குஜராத்தில் 24 தொகுதிகளில் காங்கிரஸும், பரூச் மற்றும் பாவ்நகர் ஆகிய 2 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் போட்டியிடும். ஹரியாணாவில் 9-ல் காங்கிரஸும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் (குருஷேத்ரா) போட்டியிடும். மேலும் கோவாவில் மொத்தம் உள்ள 2 மற்றும் சண்டிகர் (யூனியன்பிரதேசம்) தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும்.

குஜராத், கோவா, ஹரியாணா, டெல்லி, சண்டிகர் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் உள்ள 46 தொகுதிகளில் காங்கிரஸ் 39, ஆம் ஆத்மி, 7 தொகுதிகளில் போட்டியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எனினும், பஞ்சாப் குறித்துஎந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே, அங்கு இவ்விருகட்சிகளும் தனித்தனியாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் தொகுதிப் பங்கீடு செய்து கொண்டதற்கு சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனினும், பரந்த அரசியல் நோக்கத்துக்காக சிறு தியாகங்களை செய்ய வேண்டியது அவசியம் என கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. இதுபோல, குஜராத் மாநிலத்தில் பரூச் தொகுதியை ஆம் ஆத்மிக்கு விட்டுக் கொடுத்ததற்காக, மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் அகமது படேல் மகள் மும்தாஜ் படேல் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் மனோஜ் திவாரி நேற்று கூறும்போது, “கடந்த 2012-ம் ஆண்டு அர்விந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி தொடங்கினார். அப்போது, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் ஊழலில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் (அப்போது ஆளும் கட்சி) தலைவர்களை சிறைக்கு அனுப்புவோம் என கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் ஆம் ஆத்மி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுபோல தங்களை ஆட்சியிலிருந்து அகற்றிய ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்ததற்காக காங்கிரஸ் தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேநேரம் பாஜகவும்பிரதமர் மோடியும் ஒவ்வொருவருடைய மனதிலும் இடம்பிடித்துள்ளார். யாருக்கு வாக்களிப்பது என டெல்லி மக்கள் முடிவு செய்வார்கள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x