Last Updated : 21 Feb, 2018 01:07 PM

 

Published : 21 Feb 2018 01:07 PM
Last Updated : 21 Feb 2018 01:07 PM

மோடி பற்றி பேச சித்தராமையாவுக்கு தகுதி இல்லை: பாஜக தலைவர் அமித் ஷா பதிலடி

ஊழல் ஆட்சி நடத்திவரும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மங்களூரு வந்தார். குக்கே சுப்பிரமணியா, உடுப்பி கிருஷ்ணா உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். மங்களூருவில் சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட பாஜக தொண்டர் தீபக் ராவின்வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து மங்களூருவில் பாஜக சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாததால், மக்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். மத்திய அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட நிதியை கர்நாடக அரசு முறையாக பயன்படுத்தவில்லை. முதல்வர் சித்தராமையாவுக்கு முறையாக ஆட்சி நடத்த தெரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி, இங்கு 10 சதவீத கமிஷன் ஆட்சி தான் நடந்துக்கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் தினமும் புதுப்புது ஊழல் புகார்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஏராளமான மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன. பெங்களூருவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஹாரிஸின் மகன் முகமது நளபாட் பாஜக தொண்டர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். கொலைவெறி தாக்குதல் நடத்திய முகமது நளபாட் மீது நடவடிக்கை எடுக்காமல் கர்நாடக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது கர்நாடகாவில் ரவுடிகளின் ஆட்சி நடக்கிறதா? என சந்தேகம் ஏற்படுகிறது.

கர்நாடக மக்கள் வளர்ச்சியை விரும்புவதால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகிவிட்டது. நாடு முழுவதும் கிடைத்துள்ள பாஜகவின் வெற்றி கர்நாடகாவிலும் தொடரும். கர்நாடகாவை முன்னேற்றுவதற்காக பிரதமர் மோடி பல்வேறு வழிகளை வகுத்துள்ளார். மோடியின் அலையை பொறுக்காமலே, முதல்வர் சித்தராமையா பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார். ஊழல் ஆட்சி நடத்திவரும் சித்தராமையாவுக்கு மோடி பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. சித்தராமையாவின் ஆணவ பேச்சுக்கு, தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x