மகாராஷ்டிராவில் 39-ல் உடன்பாடு: காங். அணியில் 9 தொகுதிகள் ஒதுக்கீட்டில் இழுபறி

மகாராஷ்டிராவில் 39-ல் உடன்பாடு: காங். அணியில் 9 தொகுதிகள் ஒதுக்கீட்டில் இழுபறி
Updated on
1 min read

மகாராஷ்ராவில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இடையே 39 தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து கட்சிகளும் இத்தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் மகராஷ்டிராவில் தொகுதி உடன்பாடு குறித்து காங்கிரஸ் மூத்த தலவைர் ராகுல் காந்தி அண்மையில் தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார் பிரிவு) தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் அடுத்தடுத்து தொலைபேசியில் பேசினார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 39 தொகுதிகளில் இந்த மூன்று கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மத்திய மும்பை, வடமேற்கு மும்பை உள்ளிட்ட 9 தொகுதிகளில் இந்த 3 கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. தென் மத்திய மும்பை, வடமேற்கு மும்பை ஆகிய தொகுதிகளை சிவசேனா (உத்தவ் பிரிவு), காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கேட்கின்றன.

இது தவிர பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி 5 இடங்களை கேட்பதால் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவும் ஒருங்கிணைந்த சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டன.

இத்தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட பாஜக 23 இடங்களில் வென்றது. 23 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா 18 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில் மட்டுமே வென்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வென்றது.

பிரகாஷ் அம்பேத்கரின் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் 47 தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இதுபோல் 2019 சட்டப்பேரவை தேர்தலில் 236 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in