திரிணமூல் எம்.பி.யின் ‘தனித்துப் போட்டி’ பேச்சு; ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை பதில்

திரிணமூல் எம்.பி.யின் ‘தனித்துப் போட்டி’ பேச்சு; ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை பதில்
Updated on
1 min read

மொராதாபாத்: மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான டெரக் ஓ பிரெயின் கூறிய நிலையில், திரிணமூல் காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறது என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ்.

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் இன்று பயணிக்கிறார். இதனை ஒட்டி மொராதாபாத் வந்த ஜெய்ராம் ரமேஷ் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் மேற்குவங்க எம்.பி. டெரக் ஓ பிரெயின் காங்கிரஸ் - திரிணமூல் கூட்டணி பற்றி பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜெய்ராம் ரமேஷ், “கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எங்கள் கதவுகள் எப்போதும் திரிணமூல் காங்கிரஸுக்காக திறந்திருக்கிறது. மம்தா இண்டியா கூட்டணியை வலுப்படுத்துவேன் எனக் கூறியிருக்கிறார். அவர் தனது பெரிய இலக்கே பாஜகவை வீழ்த்துவதே என்றும் கூறியுள்ளார். மம்தா பானர்ஜியை நாங்கள் மதிக்கிறோம்.

உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது. இப்போது, ஆம் ஆத்மி - காங்கிரஸ் உடன்பாடும் நிறைவேறியுள்ளது. ஆனால் காங்கிரஸ் மெத்தனமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் அவதூறு பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை கூட்டணி இறுதியாவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும்” என்றார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வென்றது. 2021 தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் காங்கிரஸ் - திரிணமூல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, மேற்கவங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களை ஒதுக்குவதாக மம்தா கூறினார். இதற்கு காங்கிரஸ் ஒத்துக் கொள்ளாததால், மேற்குவங்கத்தில் தனித்து போட்டி என மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த காங்கிரஸ் முயன்றுள்ளது. 5 தொகுதிகளாவது ஒதுக்கும்படி தற்போது காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் ஏற்கனவே வெற்றிபெற்ற பெர்காம்பூர் மற்றும் மால்டா தெற்கு ஆகிய தொகுதிகளுடன், தற்போது பாஜக வசம் உள்ள டார்ஜிலிங், மால்டா வடக்கு, ராய்கன்ச் ஆகிய தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in