

ம.பி.யில் முன்னாள் முதல்வர் கமல் நாத் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணையவிருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் ஊகங்கள் வெளியாகின. மாநிலங்களவை எம்.பி. சீட் கிடைக்காததால் கமல்நாத் அதிருப்தியில் இருப்பதாகவும், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது முதல் ராகுல் காந்தி அவர் மீது எதிர்ப்பு காட்டி வருவதாகவும் தகவல் வெளியானது.
எனினும் கமல் நாத், கட்சியை விட்டு செல்ல மாட்டார் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். ராகுல் காந்தியின் யாத்திரை ம.பி.யில் தொடங்கும்போது அதில் கமல்நாத் பங்கேற்பார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்நிலையில் ம.பியில் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்குமாறு மக்களுக்கு கமல் நாத் அழைத்து விடுத்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் கமல்நாத் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை வரவேற்பதில் ம.பி. மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாகத்துடன் உள்ளனர். ராகுல் காந்தி நாடு முழுவதும் தெருக்களில் இறங்கி அநீதி, அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை அறிவித்துள்ளார்.
பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்வதன் மூலம் ராகுல் காந்தியின் பலமாகவும், தைரியமாகவும் மாற வேண்டும்” என பொது மக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம். பாஜகவில் இணைய விருப்பதாக வெளியாக வதந்திகளுக்கு கமல்நாத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.