Published : 24 Feb 2024 09:25 AM
Last Updated : 24 Feb 2024 09:25 AM

முஸ்லிம் திருமணம், விவாகரத்துச் சட்டம் ரத்து: அசாம் அரசு அதிரடி; அடுத்தது யுசிசி?

குவாஹாட்டி: முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்ய இருப்பதாக அசாம் அரசு அறிவித்துள்ளது. நேற்று (வெள்ளி) பின்னிரவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்துள்ளார். வரும் பிப்.28 ஆம் தேதி வரை அசாம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதனால் இது தொடர்பான மசோதா விரைவில் சட்டப்பேரவையில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசுக்கு முன்னதாகவே, உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தபட்டது. உத்தராகண்ட் வழியில் பாஜக ஆளும் மாநிலங்களில் குறிப்பாக குஜராத், அசாமில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் சூழல் உருவானது.

இந்நிலையில், உத்தராகண்ட் வழியில் அசாம் தற்போது அதற்கான முன்னெடுப்புகளை செய்கிறது. முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்யும் அசாம் அரசின் முடிவு பற்றி அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா மேலும் கூறுகையில், “முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பலமுறை பொது சிவில் சட்டம் பற்றி பேசியிருக்கிறார். அதன் நீட்சியாக ஒரு முக்கியமான முடிவு எட்டப்பட்டுள்ளது. அசாம் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935 ரத்து செய்யப்படுகிறது. இனி முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து அந்தச் சட்டத்தின் கீழ் பதியப்படாது மாறாக சிறப்புத் திருமணங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைத் திருமணங்களும் குறையும். இதுவரை மாநிலத்தில் முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்துவந்த 94 பதிவர்களுக்கும் சிறப்பு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்” என்றார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி முதல்வர் பிஸ்வ சர்மா கூறுகையில், “அசாம் அமைச்சரவை பல திருமணங்கள் தடுப்புச் சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியனவற்றை பற்றி ஆலோசித்துள்ளது. அதைப் பற்றி நாங்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தபோதே உத்தராகண்ட் அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திவிட்டது. இதனால், அசாமில் ஒரு நிபுணர் குழுவானது இரண்டு அம்சங்களையும் இணைக்கும் வகையில் ஆய்வு செய்து வருகிறது. நாங்கள் இன்னும் வலுவான சட்டத்தைக் கொண்டு வருவோம்” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியாக உள்ளன. இதற்குப் பதிலாக, அனைத்து மதத்தினரும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றுவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x