

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எம்எல்ஏ லாஸ்யா நந்திதா பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 36.
தெலங்கானாவில் செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதியில் இருந்து பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லாஸ்யா நந்திதா. இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்தசாயண்ணா, கடந்த ஆண்டுமறைந்ததால், அவரது மகளான நந்திதாவுக்கு பிஆர்எஸ் கட்சி வாய்ப்பு வழங்கியது. இந்நிலையில், எம்எல்ஏ லாஸ்யா நந்திதா, தனது உதவியாளர் அசோக்குடன் ஒரு தர்காவுக்கு சென்றுவிட்டு, மெட்சல் பகுதியில் இருந்து சதாசிவ பேட்டா நோக்கி நேற்று அதிகாலை காரில் வந்துகொண்டிருந்தார்.
செகந்திராபாத் வெளிவட்ட சாலையில் பட்டான் செருவு எனும் இடத்தில் அதிகாலை 5.30 மணி அளவில் லாரியைமுந்திச் செல்ல முயன்றபோது, இரும்பு தடுப்பு மீதும் பிறகு லாரி மீதும் இவரது கார் பயங்கரமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே லாஸ்யா உயிரிழந்தார். காரை ஓட்டிய அவரது உதவியாளர் அசோக் படுகாயமடைந்தார்.
காரை சுமார் 130 - 150கி.மீ. வேகத்தில் ஓட்டி வந்துள்ளனர். மேலும், லாஸ்யா‘சீட் பெல்ட்’ அணியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
நேற்று மாலை அவரதுஉடல் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மாரேடுபல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
முதல்வர் ரேவந்த் ரெட்டி, அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
10 நாட்களுக்கு முன்பு நல்கொண்டா மாவட்டம் நார்காட்பல்லியில் கார் விபத்துக்கு உள்ளானதில், பாதுகாவலர் உயிரிழந்த நிலையில், லாஸ்யா காயத்துடன் உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது.