மேற்கு வங்கத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட திரிணமூல் பிரமுகர் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

ஷேக் ஷாஜகான்
ஷேக் ஷாஜகான்
Updated on
1 min read

புதுடெல்லி: ரேஷன் ஊழல், பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார்களில் தொடர்புடைய திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.

மேற்குவங்கம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி தீவு பகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான். இவர் மீது ரேஷன் ஊழல், பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை, நிலங்கள் ஆக்கிரமிப்பு என பல புகார்கள் உள்ளன.

இவரது வீட்டில் சோதனை செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 5-ம் தேதிமத்திய பாதுகாப்பு படையினருடன் சென்றனர். அவர்களை ஷாஜகானின் ஆதரவாளர்கள் 200 பேர்சுற்றி வளைத்து தாக்கினர். இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தையடுத்து ஷாஜகான் தலைமறைவாகி விட்டார்.

இவர் மீது சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். ஷாஜகான் கைதுசெய்யப்படாததற்கு கொல்கத்தா உயர்நீதிமன்றமும் மேற்குவங்க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. வரும் 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ஷாஜகானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மத்தியப் படைகளின் பாதுகாப்புடன் இந்த சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in