Published : 24 Feb 2024 08:47 AM
Last Updated : 24 Feb 2024 08:47 AM

சூரியனில் இருந்து வெளியான ஆற்றலின் தாக்கம்: ஆதித்யா விண்கலத்தின் தரவுகள் வெளியீடு

சென்னை: சூரியனின் கரோனா பகுதியில் இருந்து வெளியான ஆற்றலின் தாக்கத்தை ஆதித்யா விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இது 127 நாட்கள் பயணித்து பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியை மையமாகக் கொண்ட சுற்றுப்பாதையில் ஜனவரி 6-ம் தேதி நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் சூரியனில் வெளிப்புறப் பகுதியில் வெளியான ஆற்றலின் நிலையை ஆதித்யா விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு; சூரிய புயல்கள் குறித்தும் அதிலுள்ள ஆற்றல் அயனிகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்கலத்தில் ‘பாபா’ எனும் பிளாஸ்மா பகுப்பாய்வு கருவி (Plasma Analyser Package for Aditya-PAPA) பொருத்தப்பட்டிருந்தது. இந்த கருவி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 10, 11-ம் தேதிகளில் கரோனா எனும் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் இருந்து அதிகளவு ஆற்றல் துகள்கள் வெளியானதை இது கண்டறிந்துள்ளது.

இதற்கான ஆய்வு தரவுகள் இஸ்ரோ வலைதளத்தில் (www.isro.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. ‘பாபா’ ஒரே கருவியாக இருந்தாலும் இதில் 2 சென்சார்கள் உள்ளன. இவை சூரியக் காற்றின் துகள்களின் அளவு மற்றும் அதன் திசையை அளவிட பயன்படுகிறது. இதை திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது.

தொடர்ந்து இந்தக் கருவி விண்வெளியில் உன்னிப்பாக தனது ஆய்வுகளை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆதித்யா விண்கலம் அடுத்த 5 ஆண்டுகள் வரை சூரியனின் செயல்பாடுகளை கண்காணித்து ஆராயும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x