Published : 10 Feb 2018 07:36 AM
Last Updated : 10 Feb 2018 07:36 AM

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த பாலஸ்தீனம் உட்பட 3 நாடுகளுக்கு பயணத்தை தொடங்கினார் மோடி

பிரதமர் மோடி தற்போது மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுடனான உறவை மேம்படுத்த தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒரு கட்டமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட், ஓமன் ஆகிய 3 நாடுகள் பயணத்தை நேற்று தொடங்கினார். இந்த பயணத்தின் போது முதலில் ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார் பிரதமர் மோடி.

பின்னர் அங்கிருந்து பாலஸ்தீனத்தின் ரமலா நகருக்கு மோடி செல்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு பாலஸ்தீனத்துக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்றார். எனினும், பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான். அங்கு அதிபர் மமூத் அப்பாஸைச் சந்தித்து பேசுகிறார். இதற்கு முன்னர் அவரை மோடி 3 முறை சந்தித்துள்ளார்.

4-வது முறையாக அப்பாஸை சந்திக்கும் மோடி, எரிசக்தி, வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, தீவிரவாத எதிர்ப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, இளைஞர் நலன், விளையாட்டு, வேளாண் துறைகளில் இருநாட்டு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்டில் (யுஏஇ) அபுதாபி இளவரசரும் ராணுவ துணை கமாண்டருமான ஷேக் முகமது பின் ஒயத் அல் நயானை சந்தித்துப் பேசுகிறார். அங்கிருந்து துபாய் செல்லும் மோடி, அங்கு நடக்கும் 6-வது உலக அரசு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

அதன்பின் 11-ம் தேதி ஓமன் தலைநகர் மஸ்கட் செல்லும் பிரதமர் மோடி, சுல்தான் கபூஸ் பின் சயத் அல் சயத்தை சந்திக்கிறார். அங்குள்ள பழமையான மசூதி மற்றும் சிவன் கோயிலுக்கும் மோடி செல்கிறார். இந்த சந்திப்புகளின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. -ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x