பிரதமர் மோடி Vs ராகுல் காந்தி வார்த்தைப் போர் @ வாரணாசி இளைஞர்கள் நிலை

பிரதமர் மோடி Vs ராகுல் காந்தி வார்த்தைப் போர் @ வாரணாசி இளைஞர்கள் நிலை
Updated on
1 min read

புதுடெல்லி: “மதி இழந்தவர் என் காசியின் (வாரணாசி) குழந்தைகளை குடிகாரர்கள் என்று அழைக்கிறார்” என்று தன்னை பிரதமர் மோடி கடுமையாக சாடிய நிலையில், அதே பாணியில் பதிலடி கொடுத்திருக்கிறார் ராகுல் காந்தி .

உத்தரப் பிரதேச இளைஞர்களை மோடி வஞ்சிப்பதாகக் கூறியுள்ள ராகுல் காந்தி, காவலர் தேர்வு கேள்வித்தாள் கசிவு விவகாரத்தை சுட்டிக்காட்டி, “பிரதமரின் பிரச்சாரங்கள் எல்லாம் பாட்டிக்கே அவரது தாய்வீட்டுப் பெருமையை கதையாகச் சொல்வது போல் இருக்கிறது” என்று கிண்டலடித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “லக்னோவில் இருந்து பிரயாக்ராஜ் வரை இளைஞர்கள் வீதிகளில் இறங்கி காவலர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்துக்காக கோஷம் எழுப்பி வருகின்றனர். ஆனால் அங்கிருந்து 100 கிமீ தொலைவில் வாரணாசியில் இருக்கும் பிரதமர் இளைஞர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இது எப்படி இருக்கிறது தெரியுமா? பாட்டியிடம் சென்று அவர் தாய் வீட்டுப் பெருமையை கதையாக சொல்வதுபோல் இருக்கிறது” என்று கிண்டல் செய்துள்ளார்.

பிரதமர் பேசியதுபோலவே ஒரு சொலவடையை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார் ராகுல் காந்தி. அவரது இந்த ட்வீட்டுக்குக் கீழ் காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த ட்வீட்டுடன் ராகுல் உ.பி. இளைஞர்களின் போராட்ட வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார்.

வெகுண்டெழுந்த மோடி: முன்னதாக, வாரணாசி சாலைகளில் மது அருந்திய மக்கள் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்தேன் என்று ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, “மதி இழந்தவர் என் காசியின் (வாரணாசி) குழந்தைகளை குடிகாரர்கள் என்று அழைக்கிறார்” என்று சாடியிருந்தார்.

வாரணாசியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பெயரைக் கூறிப்பிடாமல், “காங்கிரஸின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர், வாரணாசி மக்களை அதன் சொந்த மண்ணில் வைத்து அவமானப்படுத்தியுள்ளார். என்ன வகையான மொழி அது?

தொடர்ச்சியாக என்னை துஷ்பிரயோகம் செய்தவர்கள், இப்போது உத்தரப் பிரதேச இளைஞர்கள் மீது அவர்களின் விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். உத்தரப் பிரதேச இளைஞர்களுக்கு இண்டியா கூட்டணித் தலைவர்கள் ஏற்படுத்திய அவமானத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூடுவது வழக்கம். இறுதியில் முடிவு பூஜ்ஜியமாக வந்ததும், அவர்கள் பிரிந்து ஒருவர் மற்றவரை துஷ்பிரயோகம் செய்யவார்கள். இந்த முறையும் ஒட்டுமொத்த இந்தியாவின் எண்ணமும் மோடி உத்தரவாதத்துக்கு ஆதரவாக உள்ளது” என்று பிரதமர் மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in