

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நெடுஞ்சாலையை பிரதமர் மோடி வியாழக்கிழமை பின்னிரவில் ஆய்வு செய்தார். அப்போது மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமருடன் இருந்தார்.
பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இன்று தொடங்கி வைப்பதற்காகவும், வேறு பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் மோடி வியாழக்கிழமை இரவு வாரணாசி சென்றடைந்தார். இந்தநிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில் பிரதமர் மோடி, மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்துடன் ஷிவ்பூர் - புல்வாரியா - லஹார்தாரா மார்க்-ஐ ஆய்வு செய்தார். ரூ.360 கோடி செலவில் போடப்பட்டுள்ள இந்த சாலை பனராஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து விமானநிலையம் வரையிலான தூரத்தை 75 நிமிடத்தில் இருந்து 45 நிமிடங்களாக மாற்றி போக்குவரத்து நெரிசலையும் குறைத்துள்ளது. அதேநேரத்தில் லஹார்தாராவில் இருந்து கசாஹ்ரி வரையிலான பயண நேரத்தை 30 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாக குறைத்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காசியை சென்றடைந்ததும், ஷிவ்பூர் - புல்வாரியா - லஹார்தாரா மார்க் -ஐ ஆய்வு செய்தேன். சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் நகரத்தின் தெற்கு பகுதியில் இருக்கும் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் அலுவலகம் வெளியிடுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, “பிரதமர் வெள்ளிக்கிழமை காலையில் சாது குரு ரவிதாஸின் 647வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பு, சாது குரு ரவிதாஸ் ஜன்மாஸ்தலியில் பூஜை செய்து தரிசனம் செய்கிறார்.
பின்னர் அவர், தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ரூ.13,000 கோடியில் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார். மேலும் வாரணாசி சாலை இணைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, கார்கரா - பாலம் - வாரணாசி பிரிவு தேசிய நெடுஞ்சாலை 233 நான்கு வழிச் சாலை மற்றும் சுல்தான்பூர் - வாரணாசி பிரிவு தேசிய நெடுஞ்சாலை 56 நான்கு வழிச்சாலை உட்பட பல்வேறு சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.