சந்தேஷ்காலி நில அபகரிப்பு விவகாரம்:  ஷாஜகான் ஷேக் மீது அமலாக்கத் துறை பணமோசடி வழக்கு

ஷாஜகான் ஷேக் | கோப்புப்படம்
ஷாஜகான் ஷேக் | கோப்புப்படம்
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மீது அமலாக்கத் துறை பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.

நில அபகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்துள்ள அமலாகத் துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் முதல் தகவல் அறிக்கைக்கு இணையான புதிய அமலாக்கத் துறை வழக்குத் தகவல் அறிக்கை (ECIR) பதிவு செய்தது. அதேபோல், ஷாஜகான் ஷேக் உடன் தொடர்புடைய மேற்கு வங்க தொழில் அதிபரின் இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தினர். ஹவுராவில் உள்ள தொழிலதிபரின் வீடு மற்றும் சந்தேஷ்காலியில் உள்ள இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திரிணமூல் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷாஜகான் ஷேக்-ஐ கைது செய்ய வேண்டும் என்று பெரிய அளவில் போராட்டம் நடந்துவருகிறது.

இதனிடையே, ரேஷன் ஊழல் வழக்குத் தொடர்பாக ஜன.5ம் தேதி ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை அவருடைய ஆதரவாளர்கள் தாக்கியதைத் தொடர்ந்து ஷாஜகான் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in