

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு நாட்டில் மத வன்முறை அதிகரித்து விட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சில நாள்களுக்கு முன்பு இதே குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை கேரள மாநில காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சோனியா காந்தி பேசியது: உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் நாட்டின் வேறு சில பகுதிகளில் கடந்த 3 மாத காலங்களில் மத வன்முறை அதிகரித்துவிட்டது. பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மத ரீதியாக மொத்தம் 600 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது மிகவும் கவலை அளிக்கும் பிரச்சினை.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசில் இதுபோன்ற மத மோதல்கள் இல்லை. நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மத மோதல்களைத் தடுக்கவும் காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீன மக்களை காக்க வேண்டும் என்பதற்கு இந்திய அரசு உறுதியாக குரல் கொடுக்கவில்லை என்று சோனியா காந்தி பேசினார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு டெல்லிக்கு வெளியே பொது நிகழ்ச்சியில் சோனியா பங்கேற்றுப் பேசுவது இதுவே முதல்முறை யாகும்.