சரத் பவார் தரப்புக்கு புதிய சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

சரத் பவார் தரப்புக்கு புதிய சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு
Updated on
1 min read

மும்பை: சரத் பவார் தரப்பிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி சரத் பவார் தரப்புக்கு ‘Man Blowing Turha’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் அஜித் பவார் தரப்பே அசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன் மூலம் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவாருக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், சரத் பவார் தரப்பிலான அணி ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார்’ என்று அறியப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த சூழலில் சரத் பவார் தரப்புக்கு புதிய சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சின்னத்தில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தரப்பு போட்டியிடும் என தேர்தல் ஆணைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி துர்ஹா எனும் இசைக்கருவியை முழங்கும் மனிதனின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், பாஜகவோடு கூட்டணி அமைத்து அம்மாநில துணை முதல்வராக பதவியேற்றார். அவரோடு, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் அப்போது அமைச்சர்களாக பதவியேற்றனர். அக்கட்சியின் 53 எம்.எல்.ஏ-க்களில் 40 பேர் அஜித் பவார் பக்கம் உள்ளனர்.

இதையடுத்து, சரத் பவார் மற்றும் அஜித் பவார் என இருவேறு தலைமையின் கீழ் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இருதரப்பும் உரிமை கோரின. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் அதுகுறித்த இறுதி முடிவை அண்மையில் அறிவித்தது. தற்போது கட்சி மற்றும் சின்னத்தை சரத் பவாருக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in