பிரதமர் மோடி மார்ச் 6-ல் மேற்கு வங்கம் பயணம்: சந்தேஷ்காலி செல்ல திட்டம்?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தில் நகரில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெறும் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுவார் என்றும், தொடர்ந்து சந்தேஷ்காலியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திரிணமூல் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, குழந்தைகள் - இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சந்தேஷ்காலி விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக களத்தில் இறங்கி போராடி வருகிறது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிப்ரவரி 28-ம் தேதி மேற்கு வங்கத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

மேலும், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தில் நகரில் மார்ச் 6 ஆம் தேதி நடைபெறும் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுவார் என்றும், சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் அம்மாநிலத்தின் பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், “திரிணமுல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களிடம் நாங்கள் பேசுவோம். அந்த சகோதரிகள், தாய்மார்கள் பிரதமரை சந்திக்க விரும்பினால், நாங்கள் அவரைக் காண ஏற்பாடு செய்வோம்” என்றார்.

எவ்வாறாயினும், பிரதமர் மேற்கு வங்கத்துக்கு ஒரு நாள் மட்டுமே செல்கிறார் என்றும், சந்தேஷ்காலியைச் சேர்ந்த பெண்களைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் பாஜக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சந்தேஷ்காலி விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், வரும் மக்களவைத் தேர்தலில் அதை மம்தாவுக்கு எதிரான ஆயுதமாக மாற்றவும் பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in