

ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் அந் நிறுவனத்தை வாங்க உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 2011-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இதை சுட்டிக் காட்டி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் ரூ.650 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சிபிஐ-யின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் சிபிஐ இயக்குநர் அதனை ஏற்க மறுத்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவிடாமல் தடுத்து வருகிறார்.
இதேபோல் 2ஜி வழக்கில் ரிலையன்ஸ் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரி கைக்கு மாற்றாக புதிய குற்றப் பத்திரிகையை சிபிஐ தயாரித்துள்ளது.
இது முந்தைய குற்றப் பத்திரிகைக்கு நேர்மாறானதாக உள்ளது. ரிலையன்ஸ் நிறுவ னத்தைக் காப்பாற்றும் நோக்கத்தில் சிபிஐ இயக்குநர் செயல்படுகிறார்.
எனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ இயக்குநரின் தலையீடு இருக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு செப்டம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.