

நரேந்திர மோடி பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய சித்தராமையா, "மோடியின் பேச்சுகள் ஒரு பிரதமர் பேசத்தக்கதாக இல்லை. கர்நாடகாவிலும் சரி ஒட்டுமொத்த இந்தியாவிலும் சரி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், பிரதமர் அதைப்பற்றியெல்லாம் வாய் திறந்து பேசுவதில்லை. அரசியல் ரீதியாக மட்டுமே பேசுகிறார். பொறுப்பற்ற அறிக்கைகளை விடுக்கிறார். அவர் பிரதமராக இருக்கவே தகுதியற்றவர்" என்றார்.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அங்கு பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடியும் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, மோடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "கர்நாடகாவில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஊழலில் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது" என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சித்தராமையா, பிரதமராக இருக்கவே மோடி தகுதியற்றவர் என பதிலடி கொடுத்துள்ளார்.