Last Updated : 27 Feb, 2018 05:40 PM

 

Published : 27 Feb 2018 05:40 PM
Last Updated : 27 Feb 2018 05:40 PM

வரதட்சணைக் கொடுமையால் பெங்களூருவில் பெண் பொறியாளர் தற்கொலை: கணவரும், மாமியாரும் கைது

பெங்களூருவில் வரதட்சணைக் கொடுமையின் காரணமாக பெண் பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (31). இவர் தனது மனைவி ரேஷ்மி (28) மற்றும் 1 வயது ஆண் குழந்தையுடன் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளர்களான சதீஷ் குமாரும், ரேஷ்மியும் மன்யதா டெக் பார்க்கில் உள்ள பன்னாட்டு நிறுவத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, ரேஷ்மி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக ரேஷ்மியின் தாய் பாக்யம்மா ராமமூர்த்தி காவல் நிலையத்தில் மருமகன் சதீஷ் குமாருக்கு எதிராக வரதட்சணை கொடுமை புகார் தெரிவித்தார். போலீஸார் சதீஷ் குமாரிடம் விசாரணை நடத்தியபோது, ''நான் வேலைக்கு சென்றுவிட்டேன். எனது தாயாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் ரேஷ்மி தற்கொலை செய்துகொண்டதால், எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் யாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தவில்லை'' என மறுத்துள்ளார்.

எனவே, போலீஸார் ரேஷ்மியின் குடும்பத்தாரிடம் விசாரித்த போது, ''சதீஷ் குமாரும், அவரது தாயாரும் ரேஷ்மியை ரூ. 20 லட்சம் வரதட்சணை கேட்டு தினமும் ரேஷ்மியை கொடுமைப்படுத்தினர். அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பணியாற்றி வரும் தனது தங்கை பூர்ணிமாவுக்கு ஃபேஸ்புக்கில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், ''வரதட்சணைக் கொடுமை தாங்கமுடியவில்லை. இன்றுதான் என்னுடைய கடைசி நாள். என் மகனை பத்திரமாக பார்த்துக் கொள்''என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து போலீஸார் சதீஷ் குமாரையும் அவரது தாயையும் வரதட்சணைக் கொடுமை செய்து தற்கொலைக்குத் தூண்டியதற்காக இந்திய தண்டனை சட்டம் 304(பி)-ம் பிரிவின் கீழ் கைது செய்தனர். இதனிடையே பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, ரேஷ்மியின் உடல் அவரது சொந்த ஊரான கோலாரின் நேற்று தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x