ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல்: மார்ச் 9-க்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு

ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல்: மார்ச் 9-க்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
Updated on
1 min read

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதியை வரும் மார்ச் 9-ம் தேதிக்குப் பிறகு தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இத்துடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலசட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிகட்ட ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

வரும் மார்ச் 8 அல்லது 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்கு தேவையான துணை ராணுவப் படைகள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்த உள்ளது.

அத்துடன், மார்ச் 12, 13தேதிகளில் ஜம்மு காஷ்மீர் செல்லும் இக்குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து களஆய்வு நடத்த உள்ளனர். எனவே,வரும் மார்ச் 9-ம் தேதிக்குப் பிறகு மக்களவை பொதுத் தேர்தல் குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 10-ம்தேதி மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, அந்த ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் 23-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in