

லக்னோ: மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக தேர்தலின்போது பெங்களூரில் ராகுல் காந்திசுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். 2018 மே 8-ல் செய்தியாளர்களிடம் பேசும்போது மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஒரு கொலை வழக்கில் தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்திருந்தார். கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற போலி என்கவுன்ட்டர் வழக்கில் அமித் ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவரை நீதிமன்றம் விடுவித்திருந்த நிலையில், ராகுலின் இந்த பேச்சு பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, விஜய் மிஸ்ரா என்பவர் ராகுலின் இந்த அவதூறு பேச்சு தொடர்பாக 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனைவிசாரித்த நீதிமன்றம் ராகுல் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டி ருந்தது. இதுகுறித்து வழக்கறிஞர் சந்தோஷ் பாண்டே கூறியதாவது:
அவதூறு தொடர்பான வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சரணடைந்தார். அவரை நீதிமன்றம் 30-45 நிமிடங்கள் வரை காவலில் வைத்திருந்தது. இதையடுத்து, ராகுல் சார்பில்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ராகுலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ராகுல் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதுவும் பேசவில்லை. இந்த வழக்கை பொறுத்தவரையில் ராகுல் குற்றமற்றவர் என்றார்.
யாத்திரையை தடம்புரள செய்ய.. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தடம்புரள செய்யும் நோக்கில் 36 மணி நேரத்துக்கு முன்பாக தீடீரென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ராகுலும், காங்கிரஸ் கட்சியும் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சாது’’என்றார்.