

ஊழல் புகாருக்குள்ளான அதிகாரியை அமைச்சர் மேனகா காந்தி சரமாரியாக வசைபாடினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஹேரியில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டார். அப்போது அதிகாரி ஒருவர் மீது பொதுமக்களில் ஒருவர் ஊழல் புகார் கூறினார். சம்பந்தப்பட்ட அதிகாரியும் அக்கூட்டத்தில் இருந்தார்.
உடனே மேனகா காந்தி, அந்த அதிகாரியை எழுந்து நிற்கச் சொல்லி சரமாரியாக வசை பாடினார். ஊழல் புகாருக்காக அந்த அதிகாரியை அவர் திட்டியதை ஒப்புக்கொண்டாலும் அந்த நபரின் உருவத்தைக் குறித்து மேனகா காந்தி கூறியது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகியுள்ளது. அந்த நபரின் உடல் பருமனை சுட்டிக்காட்டி மேனகா காந்தி பேசியதற்கு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
கூட்டத்தில் பேசிய மேனகா காந்தி, நேர்த்தியான சாலைகள், அனைவருக்கும் மின்சார வசதி மற்றும் கழிவறை வசதி அமைவதே தனது லட்சியம் என்றார். நல்லாட்சி நடைபெற்றால்தான் மக்கள் அடுத்த தேர்தலிலும் நமக்கு வாக்களிப்பர் என்றார்.