Published : 27 Feb 2018 07:25 AM
Last Updated : 27 Feb 2018 07:25 AM

மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல்: தலா 59 தொகுதிகளில் நடைபெறுகிறது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வரும் மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறு கிறது.

தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து, இவ்விரு மாநிலங்களி லும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. எனினும், இரு மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளில் மட்டும் இன்று காலை 7 மணி முதல் 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மேகாலயாவில் வில்லியம் நகர் தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனதன் என் சங்மா குண்டு வெடிப்பில் உயிரிழந்ததால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுபோல, நாகாலாந்தில் வடக்கு அங்கமி-2 தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் (என்டிபிபி) தலைவர் நீபியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றதால், அங்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

அசாம், மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் பாஜக ஏற்கெனவே ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சர்கள் உள்ளிட் டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதுபோல காங்கிரஸ் தரப்பிலும் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளகாங்கிரஸுக்கு ஆட்சியை தக்கவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேகாலயாவில் காங்கிரஸ் 59, பாஜக 47 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இங்கு மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் கோன்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத் துள்ளது. மொத்தம் 32 பெண்கள் உட்பட 370 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 18.4 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 3,083 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.

இதுபோல, நாகாலாந்தில் பாஜக 20 தொகுதியிலும் அதன் கூட்டணி கட்சியான என்டிபிபி 40 தொகுதியிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 18-ல் களம் காண்கிறது. மொத்தம் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 11.91 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 2,156 வாக் குச் சாவடிகள் அமைந்துள்ளன.

மாநில காவல் துறையினருடன் மத்திய ஆயுத காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திரிபுரா சட்டப்பேரவைக்கு ஏற்கெனவே தேர்தல் முடிந்துவிட்டது. இதையடுத்து, இந்த 3 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x