2018-ம் ஆண்டு அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்: உ.பி. நீதிமன்றம் உத்தரவு

2018-ம் ஆண்டு அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்: உ.பி. நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

லக்னோ: கடந்த 2018-ம் ஆண்டு பாஜக பிரமுகர் தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட நீதின்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பிப்.20-ம் தேதி நேரில் ஆஜராகும் படி, சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதன்படி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் ஊடக பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை அதன் 38-வது நாள் பயணத்தை அமேதி மாவட்டத்தின் ஃபுர்சத்கஞ்ச் என்ற பகுதியில் இருந்து மதியம் 2 மணிக்கு கிளம்பி ரேபரேலி மற்றும் லக்னோ நோக்கிச் செல்லும்.

பாஜக தலைவர் ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்றில் நேரில் ஆஜராகுமாறு உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 36 மணி நேரத்துக்கு முன் திடீரென சம்மன் அனுப்பியுள்ளானர். இதனால், இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை தடம்புரளாது. ராகுல் காந்தி அமைதியாகி விடமாட்டார். இந்திய தேசிய காங்கிஸ் கட்சி இதற்கெல்லாம் அஞ்சாது” என்று தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடர்ந்த பாஜகவின் விஜய் மிஸ்ரா கூறுகையில், “அந்தச் சம்பவம் நடந்த போது நான் மாவட்ட துணைத் தலைவராக இருந்தேன். பெங்களூருவில் நடந்த கூட்டம் ஒன்றில் அமித் ஷாவை கொலைகாரர் என்று குற்றம்சாட்டி ராகுல் காந்தி பேசியிருந்தார். இந்த குற்றச்சாட்டினை கேட்ட போது, பாஜக கட்சிக்காரனாக மிகவும் வேதனை அடைந்தேன். உடனடியாக எனது வழக்கறிஞர் மூலமாக வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு 5 ஆண்டுகளாக தொடர்ந்தது. இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் மிஸ்ரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ் குமார் பாண்டே, “சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியிருந்தார். அதற்காக 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி சுல்தான்பூரில் உள்ள எம்.பி, எம்எல்ஏ.,க்களுக்கான மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி யோகேஷ் குமார் யாதவ் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தார்.

அவர் (ராகுல் காந்தி) இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை நீதிமன்றம் 30 -45 நிமிடம் காவலில் வைத்திருந்தது. அதற்கு பின்னர் ராகுலின் ஜாமீன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு (நீதிமன்றத்தால்) ஏற்றுக்கொள்ளப்பட்டது. ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால்,ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் மாவட்ட நீதின்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in