

துபையில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற நடிகை ஸ்ரீதேவி (54) நேற்றுமுன்தினம் நள்ளிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் தனி விமானம் மூலம் துபையில் இருந்து மும்பை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன், ராஜேஸ்வரி தம்பதியின் மகளாக கடந்த 1963 ஆகஸ்ட் 13-ம் தேதி ஸ்ரீதேவி பிறந்தார். அவரது இயற்பெயர் ஸ்ரீ அம்மா. பணிநிமித்தமாக அய்யப்பன், ராஜேஸ்வரி தம்பதியர் சென்னையில் வசித்தனர். சிறு வயது முதலே நடனம், நாடகம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி தனது நான்காவது வயதில் ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பல்வேறு மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், தனது 13-வது வயதில் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1970-80-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
ஜூலி என்ற படத்தின் மூலம் இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, 1978-ல் ‘சோல்வா சவான்’ படத்தின் மூலம் இந்தியில் கதாநாயகியாக களமிறங்கினார். 1980-90-களில் இந்தி திரையுலகில் கோலோச்சிய அவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை கடந்த 1985-ல் அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.
பின்னர் 1997-ல் தயாரிப்பாளர் போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்தார். அவர்களுக்கு ஜான்வி (20), குஷி (17) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு சுமார் 15 ஆண்டுகள் திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடிக்கவில்லை. பின்னர் 2012-ல் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்கு திரும்பினார். கடைசியாக 2017-ம் ஆண் டில் அவரது நடிப்பில் வெளியான ‘மாம்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார்.
ஸ்ரீதேவியின் கண வர் போனி கபூரின் சகோதரி மகனும் நடி கருமான மோகித் மார்வா, நடிகை அன்டாரா திருமணம் கடந்த 20-ம் தேதி துபையில் நடைபெற்றது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவி, இளைய மகள் குஷி பங்கேற்றனர். மூத்த மகள் ஜான்வி துபைக்குச் செல்லவில்லை.
திருமணம் முடிந்து உறவினர்கள் மும்பைக்கு திரும்பிவிட்டனர். போனி கபூர், ஸ்ரீதேவி, குஷி மட்டும் துபை ‘எமிரேட்ஸ் டவர்ஸ்’ நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் குளியல் அறையில் ஸ்ரீதேவி மயங்கி விழுந்தார். உடனடியாக ரஷித் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஸ்ரீதேவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போனி கபூரின் சகோதரரும் நடிகருமான சஞ்சய் கபூர் துபையில் நிருபர்களிடம் கூறியபோது, “மாரடைப்பு காரண மாக ஸ்ரீதேவி உயிரிழந்துள்ளார். இதற்கு முன்பு அவருக்கு மாரடைப்புக்கான எந்த அறிகுறியும் இருந்தது இல்லை. அவரது மறைவு குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது” என்று தெரிவித்தார்.
ஸ்ரீதேவியின் உடல் நேற்று காலை அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காவல் துறையின் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலின் முக்கிய உறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து துபை அரசு உயரதிகாரி ஒருவர் கூறியபோது, “இந்திய திரையுலகின் முன்னணி நடிகை என்பதால் பிரேத பரிசோதனையில் அவசரம் காட்டவில்லை. இதனால் காலதாமதம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. பல்வேறு சட்ட நடை முறைகளுக்குப் பிறகு அவரின் உடல் தனி விமானம் மூலம் துபை யில் இருந்து மும்பை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக அனில் அம்பானி குடும்பத்தினர் சொந்த விமானத்தை கொடுத்து உதவியுள்ளனர். மும்பைக்கு உடல் வந்ததும் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்கு இன்று நடைபெறக் கூடும் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.