பாலிவுட் டூ பாஜக: இஷா தியோலின் அரசியல் பயணம் ஆரம்பம்

மகள் இஷா தியோலுடன்  நடிகை ஹேமமாலினி.
மகள் இஷா தியோலுடன் நடிகை ஹேமமாலினி.
Updated on
1 min read

தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர் பாலிவுட் நடிகை ஹேமமாலினி (75). பாஜக மூத்த தலைவரான இவர் உத்தர பிரதேசத்தின் மதுரா மக்களவைத் தொகுதி எம்.பி.யாக பதவி வகிக்கிறார். நடிகை ஹேமமாலினி, நடிகர் தர்மேந்திரா தம்பதியின் மூத்த மகள் இஷா தியோல் (42). இவர் பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் கீதாஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் பாரத் தக்கானியை, இஷா தியோல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ராத்யா, மிராயா என இரு மகள்கள் உள்ளனர். 11 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு கணவரை பிரிவதாக இஷா தியோல் கடந்த 6-ம் தேதி பகிரங்கமாக அறிவித்தார்.

கணவர் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் தற்போது மும்பையில் உள்ள ஹேமமாலினியின் வீட்டில் வசிக்கிறார். மகளின் முடிவுக்கு தாய் ஹேமமாலினி ஆதரவு அளிப்பதாகவும் தந்தை தர்மேந்திரா வருத்தத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழலில் தனியார் ஊடகத்துக்கு ஹேம மாலினி அண்மையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது மகள் இஷா தியோல் பாஜகவில் உள்ளார். பல ஆண்டுகளாக அவர் அரசியலில் இருக்கிறார். தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட அவர் விரும்புகிறார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் தீவிர அரசியலில் கால் பதிப்பார்.

எனது கணவர் தர்மேந்திரா எப்போதும் எனக்கு ஆதரவாக உள்ளார். எனது குடும்பமும் எனக்கு பக்க பலமாக உள்ளது. எனது குடும்பத்தினர் வீட்டை கவனித்து கொள்கின்றனர். எனவே நான் மதுராவில் முகாமிட்டு மக்கள் பணிகளை மேற்கொள்கிறேன். சில நேரங்களில் தர்மேந்திராவும் மதுராவுக்கு வருகிறார். இவ்வாறு ஹேமமாலினி தெரிவித்தார்.

கணவரை பிரிவதாக இஷா தியோல் அறிவித்த பிறகு நேற்று அவர் மும்பை விமான நிலையத்துக்கு வந்தார். செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்ப முயன்றனர். கேள்விகளை தவிர்த்த இஷா தியோல், "நான் நன்றாக இருக்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in