ராஜஸ்தான் காங். பழங்குடியின தலைவர் மகேந்திரஜீத் மாளவியா பாஜகவில் ஐக்கியம்

பாஜகவில் இணைந்த மகேந்திரஜீத் மாளவியா (வலது புரத்தில் இருந்து மூன்றாவதாக இருப்பவர்)
பாஜகவில் இணைந்த மகேந்திரஜீத் மாளவியா (வலது புரத்தில் இருந்து மூன்றாவதாக இருப்பவர்)
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழங்குடியின தலைவர் மகேந்திரஜீத் மாளவியா பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், மகேந்திரஜீத் மாளவியா பாஜகவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியைவிட பாஜக செல்வாக்காக உள்ள பகுதி தெற்கு ராஜஸ்தான். இந்த பகுதியில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின தலைவரான மகேந்திரஜீத் மாளவியா, இந்த மாவட்டத்தில் உள்ள பகிதோரா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2008-ல் முதல்முறை எம்எல்ஏ-வாக தேர்வான இவர், 2013-ல் நடைபெற்ற தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு எதிராக மிகப் பெரிய அதிருப்தி அலை இருந்தபோதும் பாஜக வேட்பாளர் கேம்ராஜ் கராசியாவை தோற்கடித்து வெற்றி பெற்றவர்.

2018 சட்டமன்றத் தேர்தலின்போதும் கேம்ராஜ் கராசியாவை இவர் தோற்டித்தார். 2008 முதல் தொடர்ந்து 4 முறை பகிதோரா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்வான இவர், கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாநில அமைச்சராக பதவி வகித்தார்.

மகேந்திரஜீத் மாளவியா பாஜகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் சி.பி. ஜோஷி, “பழங்குடி பிராந்தியத்தில் செல்வாக்கு மிக்க தலைவரான மகேந்திரஜீத் சிங் மாளவியா, பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவின் கொள்கைகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை பண்பு மீது உள்ள ஈர்ப்பால் அவர் பாஜகவின் உறுப்பினராக சேர்ந்துள்ளார்.

நரேந்திர மோடி அரசு பழங்குடி மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவராக பழங்குடியின பெண் ஒருவரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவை எல்லாம்தான் மகேந்திரஜீத் சிங் மாளவியா பாஜகவில் இணைய காரணம்” என குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரஜீத் சிங் மாளவியா, “நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் அவல நிலையை நீங்கள் பார்க்க முடியும். குறிப்பிட்ட சிலரால் கட்சி வேட்டையாடப்படுகிறது. அவர்கள்தான் கட்சியை ஒன்றுமில்லாமல் செய்து வருகிறார்கள். நாடு மற்றும் மக்கள் மீதான பார்வையில் இருந்து கட்சி எங்கோ விலகிச் சென்றுள்ளது” என குற்றம் சாட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in