370 தொகுதிகளில் வெற்றி பெற அடுத்த 100 நாட்களும் உத்வேகத்துடன் பணியாற்றுங்கள்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை

370 தொகுதிகளில் வெற்றி பெற அடுத்த 100 நாட்களும் உத்வேகத்துடன் பணியாற்றுங்கள்: பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 370 தொகுதிகளில் நாம் வெற்றி பெற, அடுத்த 100 நாட்களும் உத்வேகம், நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் கட்சித் தலைவர் நட்டா தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், தேசிய நிர்வாகிகள், மாநில, மாவட்டத் தலைவர்கள், அணி தலைவர்கள், தேசிய செயற்குழு நிர்வாகிகள் என 11,500 பேர் பங்கேற்றனர். இக்கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர்கூட இதைத்தான் கூறுகின்றனர். இது சாத்தியமாக வேண்டுமானால் பாஜக 370 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம்.

நாட்டு நலனுக்காக பாஜக நிர்வாகிகள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனினும், அடுத்த 100 நாட்களுக்கு புதிய உத்வேகம், நம்பிக்கையுடன் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு புதிய வாக்காளர், மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள், ஒவ்வொரு சமுதாயத்தினரையும் நேரில் சந்தித்து, மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்க வேண்டும்.

நான் 3-வது முறையாக பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்புவது, அதிகாரத்தை அனுபவிக்க அல்ல. நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதற்காகவே மீண்டும் பிரதமராக விரும்புகிறேன். ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நான் வாழ்கிறேன். கோடிக்கணக்கான பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் கனவுதான் மோடியின் தீர்மானம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in