Published : 19 Feb 2024 06:46 AM
Last Updated : 19 Feb 2024 06:46 AM
வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் வாராணசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேசிய ஜோடோ நியாய யாத்திரையில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, கேரளாவின் வயநாட்டில் போராட்டம் நடைபெற்றது. வனவிலங்குகள் மனிதர்களை அடிக்கடி தாக்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணகோரி, நேற்று முன்தினம் கடையடைப்பு நடத்தப்பட்டது. சாலை களில் வாகனங்கள் இயங்கவில்லை.
இதையடுத்து வாராணசியில் தனது யாத்திரையை பாதியில் நிறுத்திவிட்டு, தனது சொந்த தொகுதியான வயநாட்டுக்கு ராகுல்சென்றார். மணந்தவாடி பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த வனத்துறை பாதுகாவலர் ஆஜி என்பவரது வீட்டுக்கு ராகுல் சென்றார். அங்கு 20 நிமிடங்கள் தங்கியிருந்த ராகுல், ஆஜி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அதன்பின் குருவா தீவு பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த வனத்துறை சுற்றுலா வழிகாட்டி பால் என்பவது வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்.
அமைச்சர் விமர்சனம்: இது குறித்து விமர்சித்துள்ள கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முரளிதரன் கூறுகையில், ‘‘ராகுல் காந்தி தனது சொந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுலா பயணி போல் செல்கிறார். அவர் தனது தொகுதி பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். இங்கு வன விலங்குகள் மனிதர்களை தாக்கும் சம்பவம் ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சரியான மருத்துவ உதவி கிடைக்காததால், வன பாதுகாவலரும், சுற்றுலா வழிகாட்டியும் உயிரிழந்தனர். வயநாட்டில் மருத்துவ கல்லூரியே இல்லை. வயநாட்டில் அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் முரளிதரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT