Last Updated : 28 Feb, 2018 12:09 PM

 

Published : 28 Feb 2018 12:09 PM
Last Updated : 28 Feb 2018 12:09 PM

பள்ளிக் குழந்தைகள் 9 பேர் மீது காரை மோதவிட்டு கொலை செய்த பாஜக தலைவர் போலீஸில் சரண்

 

பிஹார் மாநிலம், முசாபர்பூரில் சாலையில் நடந்து சென்ற பள்ளிக் குழந்தைகள் 9 பேர் மீது காரை மோதவைத்து கொலை செய்த பாஜக தலைவர் மனோஜ் பைதா போலீஸில் இன்று சரணடைந்தார். அவரை கைது செய்ததாக போலீஸார் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தனர்.

பிஹார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், சீதாமாரி பகுதி பாஜக தலைவர் மனோஜ் பைதா. இவர் கடந்த சனிக்கிழமை தனது காரில் மினாப்பூரைக் கடந்து, தரம்பூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையைக் கடந்து கொண்டு இருந்த 7 முதல் 13 வயதுள்ள பள்ளிக்குழந்தைகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயத்துடன் பாட்னா, முசாபர்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

முதலில் பாஜக தலைவர் மனோஜ் பைதா காரை விட்டு மோதவில்லை என்று மறுத்த மாநில பாஜக அலுவலம், பின்னர் அவர்தான் என்பதை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, அடுத்த 6 ஆண்டுகளுக்கு மனோஜ் பைதாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தது.

இந்த விபத்துக்குப் பின் தப்பி ஓடி மனோஜ் பைதா தலைமறைவாகினார். இதையடுத்து, போலீஸார் ஐபிசி பிரிவு 279, 308, 337, 338, 304 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். மேலும், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் போலீஸார் ஆய்வு செய்ததில், காரை மனோஜ் பைதா ஓட்டியது தெளிவாகத் தெரியவந்தது. இதையடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் ஆகியவை, மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டபோதிலும், பாஜக தலைவர் மனோஜ் பைதா மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தலைமறைவாக இருந்த மனோஜ் பைதா இன்று முசாபர்பூர் போலீஸ்நிலையத்தில் சரண்அடைந்தார். இதை முசாபர்பூர் மாவட்ட போலீஸ் எஸ்பி விவேக் குமாரும் உறுதி செய்தார்.

தலையில் 24 தையல்கள் போடப்பட்டு படுகாயத்துடன் இருந்த மனோஜ் பைதாவை சிகிச்சைக்காக முசாபர்பூரில் உள்ள சதார் மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். அவரை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதன்பின் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x