

குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ள அல்லது வழக்குகளை எதிர் கொண்டுள்ளவர்களை அமைச்சர்களாக நியமிக்கக் கூடாது என பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு மனோஜ் நாருல்லா என்பவர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அப்போதைய மத்திய அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், முகமது தஸ்லிமுதீன், எம்.ஏ.ஏ. பாத்மி மற்றும் ஜெய்பிரகாஷ் யாதவ் ஆகிய நான்கு பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மதன் பி. லோகுர், குரியன் ஜோசப், எஸ்.ஏ. பாப்தே ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றப்பின்னணி கொண்டவர்களை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்தோ நீக்குவது குறித்தோ அரசியல் சாசனத்தில் கூறப்படவில்லை. எனவே, யாரையும் தகுதிநீக்கம் செய்யமுடியாது எனக் கூறிய நீதிபதிகள், இம்மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
இருப்பினும், குற்றப்பின்னணி கொண்ட வர்களை அமைச்சர்களாக நியமிப்பது அல்லது நியமிக்காமல் இருப்பது தொடர் பான முடிவை பிரதமர் மற்றும் முதல் வர்கள்தான் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ள நீதிபதிகள், அத்தகையவர் களை அமைச்சர்களாக நியமிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதாவது:
தேசம் பிரதமர் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மூலம் நல்ல நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்க் கின்றனர். அவ்வாறு தேர்ந் தெடுக்கப்படும் அமைச்சர்கள் குற்றச் சம்பவங்களுடன் தொடர் புடையவர்களாக இருக்கக் கூடாது. குறிப்பாக தீவிர குற்றச் செயல்களுக்காக வழக்கை எதிர்கொள்பவராக இருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அரசியலில் குற்றப்பின்னணி உடையவர்கள் இருப்பது ஜனநாயகத்தின் புனிதத் தன்மை மீதான சாபக்கேடு. தேர்ந் தெடுக்கப்பட்ட ஜனநாயகத்தின் அடிப்படை ஊழலாலும், குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகளாலும் அரிக்கப் பட்டுவிடும். அரசியலமைப்பு நிர்வாகமும் பாதிக்கப்பட்டுவிடும்.
ஒழுக்கக்கேடு, தீவிர குற்ற வழக்குகள், ஊழல் குற்றச்சாட்டு ஆகியவை சுமத்தப்பட்ட ஒருவரை அமைச்சரவையில் இடம்பெறச் செய்யக்கூடாது என்பதை பிரதமர் முடிவு செய்ய வேண்டும். அதைத் தான் அரசியலமைப்பு கூறுகிறது; பிரதமரி டமிருந்து எதிர்பார்ப்பதும் அதைத்தான். இதுதொடர்பாக பிரதமர்தான் அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
குற்றப்பின்னணி கொண்டவர்களை அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது அல்லது சேர்க்கலாம் என்று அரசியல் சட்டத்தின் 75-வது பிரிவு கூறவில்லை. இது, சட்டப்பிரிவு 164(1)ன் படி பிரதமர் மற்றும் முதல்வர்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தகுதி குறித்து நாடாளுமன்றம் வரையறுக்க வேண்டிய தருணமிது.
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத், “நீதித்துறையில் இருப்ப வர்கள் உயர்ந்த தகுதியுடை யவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், அச்சட் டத்தை உருவாக்கியவர்களான, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி தேவையில்லை எனக் கருதுவது முரணானது” எனக் கூறியுள்ளார். ராஜேந்திர பிரசாத்தின் இக்கூற்றின் அடிப்படையில் நாடாளுமன்றம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சட்டத்தின் ஆட்சி நடை பெறும் ஒரு நாட்டில், சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள ஒருவரிடம் எப்படி நிர்வாகத்தை ஒப்படைக்க முடியும். ஒருவரின் நேர்மை சந்தேகத்திடமாகும் போது அவரை அரசின் முக்கியமான பதவியில் அமர்த்தக் கூடாது. ஏதாவதொரு குற்ற வழக்கில் தொடர்புடையவர் அல்லது வழக்கை எதிர்கொண்டிருப்பவர் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும்வரை நாட்டின் எந்தவொரு மக்கள்பணியிலும் அமர்த்தப்படக்கூடாது.
இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.