

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாகவிசாரிக்கச் சென்ற தேசிய பட்டியலினத்தோர் (எஸ்சி) ஆணைய பிரதிநிதிகள் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி என்ற கிராமம். இங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும் பெண்களை பாலியல்வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து தலைமறைவான ஷாஜகான் ஷேக்கை கைது செய்ய வலியுறுத்தி அங்கு தொடர் போராட்டம் நடைபெறுவதால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் தேசிய பட்டிய லினத்தோர் ஆணைய பிரநிதிகள் குழு நேற்று முன்தினம் சந்தேஷ்காலி சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது தங்களுக்கு ஏற்பட்ட துயரத்தை அக்குழுவிடம் பெண்கள் எடுத்துரைத்தனர். ஷாஜகான் ஷேக்கை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து டெல்லி திரும்பிய பிரதிநிதிகள் குழு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அறிக்கை அளித்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இதற்கிடையில் சந்தேஷ்காலி வன்முறை குறித்து நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிபிஐ அல்லதுசிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஏ.ஏ.வத்சவா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், கடமையை செய்யத் தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வன்முறை தொடர்பான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். மணிப்பூரை போன்று 3 நீதிபதிகள் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
பாஜக பிரதிநிதிகள் குழு: இதற்கிடையில் சந்தேஷ்காலி சென்று நிலைமையை ஆய்வு செய்வதற்காக கட்சியின் எம்.பி.க்கள் கொண்ட 6 உறுப்பினர் குழுவைபாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்தார். மத்திய அமைச்சர்கள் அன்னபூர்னா தேவி, பிரதிமா பவுமிக், எம்.பி.க்கள் சுனிதா துகல்,கவிதா படிதார், சங்கீதா யாதவ்,உ.பி. முன்னாள் டிஜிபி பிரிஜ்லால் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேற்கு வங்கம் சென்ற இக்குழுவினர் நேற்று சந்தேஷ்காலி புறப்பட்டனர்.
ஆனால் இவர்களை ராம்பூர்என்ற கிராமத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். சந்தேஷ்காலியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் பாஜக பிரதிநிதிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.