Last Updated : 20 Feb, 2018 08:35 AM

 

Published : 20 Feb 2018 08:35 AM
Last Updated : 20 Feb 2018 08:35 AM

காங்கிரஸின் கமிஷன் ஆட்சியில் கர்நாடகா பின்னோக்கி செல்கிறது: மைசூருவில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கர்நாடக முதல்வர் சித்தராமையா தான் பிறந்த மைசூருவை மறந்துவிட்டார். அவர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா பின்னோக்கி செல்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு நேற்று முன் தினம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் சித்தராமையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி மோடியும், சித்தராமையாவும் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்ட போதும், இந்த சந்திப்பின் போது இருவரும் சிரித்தவாறு பேசிக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மோடி நேற்று காலை மைசூரு - பெங்களூரு இடையேயான 8 வழி சாலைக்கான அடிக்கல் நாட்டினார். மேலும் மைசூரு - உதய்பூர் இடையேயான ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக ஷரவனபெலகோலாவில் நடைபெற்றுவரும் சமணர்களின் மகாமஸ்தகாபிஷேக விழாவில் பங்கேற்ற மோடி, சிறப்பு அபிஷேகம் செய்தார்.

பின்னர் மாலையில் ஹெலிகாப்டர் மூலம் மைசூரு திரும்பிய மோடி, மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: மைசூருவில் பிறந்து வளர்ந்த சித்தராமையா தனது சொந்த மண்ணையே மறந்துவிட்டார். மைசூருவில் இருக்கும்போது இந்த நகரத்தின் வளர்ச்சியை பற்றி பேசியவர், பெங்களூருவுக்கு சென்றதும் மைசூருவை மறந்துவிட்டார். இதனால் மைசூரு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகா வளர்ச்சி அடையவில்லை. முன்னோக்கி செல்லாமல், பின்னோக்கி செல்கிறது. கர்நாடக மக்களுக்கு வளர்ச்சி வேண்டுமென்றால் பாஜகவை ஆதரிக்க வேண்டும். இந்த மாநிலத்தை முன்னேற்றுவதற்காக ஏராளமான திட்டங்களை பாஜக வைத்திருக்கிறது.

சித்தராமையாவின் ஆட்சியை கமிஷன் ஆட்சி என்கிறார்கள். எந்த வேலை நடக்க வேண்டும் என்றாலும் 10 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. அந்த நிலையை மாற்ற வேண்டும். முன்னேற்றத்தை தாரக மந்திரமாக கொண்டுள்ள பாஜகவை மக்கள் விரும்புகிறார்கள். கமிஷன் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டார்கள்.

கர்நாடகாவில் உள்ள வளத்தை கொண்டு முன்னேற்ற திட்டங்களை பாஜக வகுத்திருக்கிறது. இங்குள்ள இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்தும் வகையில் நிறைய புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மைசூருவின் வளர்ச்சியை மையமாக வைத்தே புதிய ரயில், புதிய சாலை வசதிகள் உருவாக்கப்படுகிறது. மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களை எளிதாக சென்றடைய, மாநிலத்தில் பாஜக அரசு அவசியம். எனவே காங்கிரஸை கர்நாடகாவை விட்டு விரட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x