வேகமெடுக்கும் செந்தில் பாலாஜி வழக்கு முதல் உதயம் தியேட்டர் மூடல் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.15, 2024

வேகமெடுக்கும் செந்தில் பாலாஜி வழக்கு முதல் உதயம் தியேட்டர் மூடல் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.15, 2024
Updated on
3 min read

தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது எனக் கூறி அவற்றை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. அதில், "தேர்தல் பத்திர முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திர முறை உள்ளது. தேர்தல் பத்திர முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால், அதனை ரத்து செய்யலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளது.

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் வாக்குகளின் அதிகாரம் வலுக்கும்” தேர்தல் பத்திரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, “பணத்துக்கு எதிரான வாக்குகளின் அதிகாரத்தை இது வலுப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், விவிபாட் (VVPAT) தொடர்பாக அரசியல் கட்சிகளை சந்திக்கக் கூட தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருவதையும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

“சிஸ்டம் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும்!” - முதல்வர் ஸ்டாலின்: “தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது. இது வெளிப்படையான தேர்தல் செயல்முறையை உறுதி செய்யும். இந்த தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயகம் மற்றும் சமநிலையை மீட்டெடுத்துள்ளது. இந்த சிஸ்டம் மீதான சாமானியர்களின் நம்பிக்கையையும் தீர்ப்பு உறுதி செய்துள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரம் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் கருத்து: “தேர்தல் பத்திரம் திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். இதன்மூலம் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற மத்திய பாஜக, கார்ப்பரேட்டுகளின் உதவியோடு தேர்தல் நிதி குவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், உரிமையை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் கொண்டாடி வரவேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

“ஜனநாயகத்தின் அடித்தளமான தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகளுக்கு வரும் நிதி ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக அமைவதற்கு இந்தத் தீர்ப்பு வழி வகுத்துள்ளது. ஜனநாயகத்தை இத்தீர்ப்பு தலைநிமிர வைத்துள்ளது” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இத்தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

“தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பு வெளிப்படைத்தன்மைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.” என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தேர்தல் பத்திரம் தீர்ப்பு: எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து: தேர்தல் பத்திரம் திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் குறிப்பிட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். “நரேந்திர மோடியின் ஊழல் கொள்கைகளுக்கு மற்றொரு சான்றாக இது உங்கள் முன் உள்ளது. தேர்தல் பத்திரங்களை லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்குவதற்கான தளமாக பாஜக மாற்றியுள்ளது.” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தல் பத்திரம் திட்டத்தை துவங்கியபோதே அது ஜனநாயகத்துக்கு விரோதமானது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மோடி அரசின் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்வோம் என்று 2019-ல் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. கருப்புப் பணத்தை மாற்றும் மோடி அரசின் இத்திட்டத்தை சட்டவிரோதம் என்று கூறி, வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

“கொள்கை அளவில், தேர்தல் பத்திரங்களை ஏற்காத ஒரே கட்சி சிபிஐ(எம்) மட்டுமே. ஊழலுக்கு எதிரான இந்த அரசாங்கத்தின் கூற்றுகளை இது அம்பலப்படுத்தியுள்ளது.” மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

“இது அரசியல் கட்சியை வளப்படுத்தும் திட்டம் என்று நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன். இது தேர்தலுக்காக அல்ல. தேர்தல் பத்திரங்கள் என்பது முழுக்க முழுக்க தவறானது. இதற்கும், தேர்தலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இது கார்ப்பரேட் துறைக்கும், பாஜகவுக்கும் இடையேயான பிணைப்பு.” மாநிலங்களவை எம்பி கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு கண்டனம், இபிஎஸ்ஸுக்கு ‘அழைப்பு’ - முதல்வர் பதிலுரை: “ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துத் தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே சட்டமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்” என்று ஆளுநரின் சட்டப்பேரவை செயல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் , “இதுநாள் வரையில் பாஜகவோடு கூட்டணியில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இப்போதாவது பேசுகிறாரே என்ற அளவில் ஆறுதல் தருகிறது. இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, எதிர்க்கட்சித் தலைவர் எங்களுடன் இணைந்து ஒன்றிய அரசிடம் நிதி பெற குரல் கொடுக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தனது பதிலுரையில் குறிப்பிட்டார்.

“எங்களின் பாஜக எதிர்ப்பை என முதல்வரே ஒப்புக்கொண்டார்” - இபிஎஸ்: பாஜகவுக்கு எதிராக பேசிவருவதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்தது குறித்து கூறும்போது, “பரவாயில்லை. இதுநாள் வரை அடிமை என்று பேசிய முதல்வரே இன்று நாங்களும் எதிர்க்கிறோம் என்பதை ஒத்துக்கொண்டார். அதிமுக பொறுத்தவரை கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு சாதமாக இருந்தால் ஆதரிப்போம். தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் விவசாயிகள் மறியலால் ரயில் சேவை பாதிப்பு: டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பஞ்சாப்பின் பல இடங்களில் விவசாயிகள் தண்வாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் டெல்லி - அமிர்தசரஸ் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் வியாழக்கிழமை திருப்பிவிடப்பட்டன. விவசாயிகள் பல சுங்கச்சாவடிகளில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர்.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத் துறை வாதம்: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020-ல் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்கத் துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை; திருத்தவும் இல்லை. சாட்சி விசாரணை தொடங்க தயாராக உள்ளோம்” என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை வெள்ளிக்கிழமை நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

மூடப்படுகிறது சென்னை உதயம் தியேட்டர்: கரோனாவுக்கு பிறகு திரையரங்குகளுக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டதால், பல திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான உதயம் திரையரங்கும் மூடப்படுகிறது. இந்த வளாகத்தில் உதயம் மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரையரங்குகள் இயங்கி வந்தன. 1983-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கு 41 வருடங்களாக செயல்பட்டு வந்த நிலையில் இப்போது மூடப்படுகிறது. கட்டுமான நிறுவனம் ஒன்று அந்த இடத்தை வாங்கியுள்ளது. அங்கு குடியிருப்பு வளாகம் வரலாம் என்று கூறப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in