கடமை தவறாத 50,000 டெல்லி போலீஸாரை நெகிழ்ச்சியுறச் செய்த பிரதமர் மோடி

கடமை தவறாத 50,000 டெல்லி போலீஸாரை நெகிழ்ச்சியுறச் செய்த பிரதமர் மோடி
Updated on
1 min read

டெல்லி காவல்துறையில் விடுமுறை நாள், பண்டிகை நாள் என்று பார்க்காமல் கடமையாற்றிய 50,000 காவலர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

நாட்டின் 68வது சுதந்திர தினத்திலிருந்து புதிய நடைமுறை ஒன்றைப் பிரதமர் அலுவலகம் அறிமுகம் செய்தது. அதன் படி, விடுமுறை, பண்டிகை நாட்கள் என்று பார்க்காமல் கடமையாற்றிய காவல் ஊழியர்கள் பட்டியலைத் தயாரித்து பிரதமருக்கு அனுப்பியுள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடி அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை மெசேஜ் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முயற்சியை வாழ்த்துக்களைப் பெற்ற காவல்துறையினர் நெகிழ்ந்து போய் மிகவும் பாராட்டியுள்ளனர்.

டெல்லி காவல்துறை இணை ஆணையர் திபேந்திர பதக் சுதந்திர தினத்தன்று மோடியின் வாழ்த்துச் செய்தியை வரப்பெற்றார். இது பற்றி அவர் கூறும்போது, “இம்மாதிரி ஒவ்வொரு முறையும் பிரதமரிடமிருந்து வாழ்த்துகள் வரப்பெற்றால், காவல்துறையினரை அது மேலும் உத்வேகப்படுத்தும், இரவு பகல் பாராமல் மேலும் அவர்கள் கடமையாற்ற இந்த முயற்சி உதவும்” என்றார்.

இதற்காக சுதந்திர தினத்திற்குச் சில நாட்கள் முன்பே டெல்லி காவல்துறைக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் எழுதியிருந்தது. அதாவது கடமை தவறாத காவலர்களைப் பற்றிய தரவுகளை தயாரிக்கக் கோரப்பட்டிருந்தது.

இதனையடுத்து 60% தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்தி சென்றடைந்துள்ளது. மேலும் 80,000 காவல்துறை ஊழியர்களின் தரவுகளும் திரட்டப்படவுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in