Published : 14 Feb 2024 05:41 AM
Last Updated : 14 Feb 2024 05:41 AM

ராமரை காட்டுக்கு அனுப்பியது போல் நிதிஷ் என்னை மக்களிடம் அனுப்பியுள்ளார்: தசரதருடன் ஒப்பிட்டு தேஜஸ்வி விமர்சனம்

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரைதசரதருடன் ஒப்பிட்டு, சட்டப்பேரவையில் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசினார்.

பிஹார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: முதல்வர் நிதிஷ் குமார், என்னை அவரது வாரிசாக பலபொதுக்கூட்டங்களில் கூறியிருக்கிறார். பாஜகவினர் ராமரை பற்றி பேசுகின்றனர். நிதிஷ் குமாரை நான் தசரதராக கருதுகிறேன். மனைவி கைகேயியின் பேச்சை கேட்டு தசரதர், ராமரை காட்டுக்கு அனுப்பியது போல், நிதிஷ் குமார் என்னை மக்களிடம் அனுப்பியுள்ளார். உடன் இருக்கும் கைகேயி குறித்து நிதிஷ் குமார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர் அடிக்கடி கூட்டணி மாறும் காரணத்தை அறிய மக்கள் விரும்புகின்றனர்.

9 முறை முதல்வராகி, அதுவும் 5 ஆண்டு முடிவடைதற்குள் 3 முறை முதல்வராகி வரலாறுபடைத்த முதல்வர் நிதிஷ் குமாருக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். இப்படியொரு சம்பவம் இதற்குமுன் நடந்ததில்லை. துணை முதல்வர்களாக சாம்ராட் சவுத்திரியும், விஜய் சின்ஹாவும் பதவியேற்றது மகிழ்ச்சி. இவர்களில் விஜய் சின்ஹா 5 ஆண்டு காலத்துக்குள் சபாநாயகராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்துவிட்டார். நான் எப்போதும் நிதிஷ் குமாரை மதிக்கிறேன். தொடர்ந்து மதிப்பேன். இண்டியா கூட்டணியில் நீங்கள் தூக்கிச் சென்ற கொடியை நான் கொண்டு செல்வேன்.

பிஹாரில் 17 மாதங்கள் நடந்த மெகா கூட்டணி ஆட்சியில் பல பணிகள் முடிக்கப்பட்டன. 10 லட்சம்பேருக்கு அரசு வேலைகள் வழங்க வேண்டும் என நான் நிபந்தனை விதித்தேன். இது சாத்தியமில்லை என நிதிஷ் குமார் கூறினார்.

ஆனால் 17 மாதங்களில் அதை நாங்கள் சாத்தியமாக்கினோம். ஒரே துறையில் மட்டும் 2 லட்சத் துக்கும் மேற்பட்டோருக்கு வேலை அளிக்கப்பட்டது. இதற்கு மன உறுதி வேண்டும். நிதிஷ் குாமர் களைத்துபோன முதல்வர். அவரை நாங்கள்தான் பணியாற்ற வைத்தோம். இவ்வாறு தேஜஸ்வி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x